பக்கம்:கபாடபுரம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

கபாடபுரம்


"இப்போதெல்லாம் நாங்களும் விழித்துக் கொண்டுவிட்டோம். அவர்களைப்போல் பாதுகாப்பு நலன்கள் நிறைந்த விசாலமான பூமியை நாங்கள் ஆளவில்லை. எங்களுடைய சிறிய தீவை நாங்கள் பாதுகாத்துக்கொள்வதற்கு உரிய ஒரே வழி கடல்வழிதான். தேர்களையோ, சகடங்களையோ செய்து நாங்கள் பயனடைய முடியாது. எனவே, நாத கம்பீரம்: அருவியாக வீழ்ந்து ஆறாகப் பெருகிக் கடலுள்கலக்கும் இடத்தில் உள்முகமாக வனத்தின் அடர்ந்த பகுதியில் ஆற்றை ஆழப்படுத்தி நாங்களே கப்பல் கட்டும் தளம் ஒன்று அமைத்திருக்கிறோம். அந்தக் கலஞ்செய் நீர்க்களத்தில் இது காறும் சில நல்ல மரக்கலங்களைக் கட்டி முடித்திருக்கிறோம். இந்தத் தீவின் கடற் காவல்கள் அவற்றை வெள்ளோட்டமாக எடுத்துக்கொண்டு கடலின் பல பகுதிகளுக்குப் போயிருக்கிறார்கள். இனிமேல் இந்தத் தீவில் கிடைக்கும் வைரம் பாய்ந்த நல்ல மரங்கள் எல்லாம் முதலில் எங்கள் கலஞ்செய் நீர்க்களத்தை நாடித்தான் போகும்."

"பாராட்டத்தக்க முயற்சிதான் ஐயா! ஆனால் இத்தகைய கலங்களைக் கட்டுவதற்கு அநுபவம் வாய்ந்த வல்லுநர்கள் நிறைய வேண்டியிருப்பார்களே?" என்று பாராட்டுவதுபோல் எயினர்தலைவனிடம் ஒரு கேள்வியைப் போட்டான் சாரகுமாரன்.

"அதற்குப் பஞ்சம் ஒன்றுமில்லை! 'கபாடபுரம்' முதலிய கோநகரங்களிலே தேரும், கலமும் கட்டிமுடித்து வெள்ளோட்டம் விடும் வித்தகர்களாக இருப்பவர்களே இந்தத் தீவிலிருந்து சென்ற வலிமையாளர்கள் தானே?" என்று எயினர் தலைவன் உடனே ஆத்திரத்தோடு எதிர்த்துக் கேட்ட கேள்வியிலேயே சாரகுமாரனுக்கு வேண்டிய செய்தியும் கிடைத்துவிட்டது.

சிறிதுநேர மெளனத்துக்குப்பின் எயினர் தலைவனிடம் சாரகுமாரன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

"ஐயா! நாதகம்பீர ஆற்றை ஆழப்படுத்திக்கப்பல் கட்டும். தளம் அமைத்திருக்கும் பகுதியை யாத்திரிகர்களாகிய நாங்களும், காண ஆசைப்படுகிறோம். எங்கள் ஆசை நியாயமானதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/134&oldid=490061" இலிருந்து மீள்விக்கப்பட்டது