உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கபாடபுரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

133


தாங்கள் கருதினால் மட்டுமே இந்த விருப்பத்தை ஏற்கலாம். இல்லாவிடில் நாங்களே எங்கள் விருப்பத்தை விட்டுவிடுகிறோம்."

"பொதுவில் நாங்கள் அந்நிய தேசத்து யாத்திரிகர்கள் எவரையும் அங்கு அழைத்துச் செல்வதில்லை. ஆயினும் உங்களிருவருடைய அன்பான வேண்டுகோளிலும் நியாயமிருப்பதாக எனக்குத் தோன்றுகிற காரணத்தால் நான் அதற்கு இணங்குகிறேன். இன்று மாலையிலேயே உங்கள் விருப்பத்தை நிறைவு செய்யப்பார்க்கிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனைக்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும். கலஞ்செய் நீர்நிலைக் களனுக்குச் செல்கிற வழியைக் கூடிய வரை வேறு தேசத்தார் அறியவிடக்கூடாது என்பது எங்கள் கருத்து. அதனால் செல்லும்வழி முடிய உங்கள் இருவருடைய கண்களையும் மேலாடையினால் கட்டி மறைத்தே அழைத்துச் செல்லமுடியும். தளத்தை அடைந்தவுடனே நீங்கள் சுதந்திரமாகக் கண்களைத் திறந்து பார்க்கலாம். இந்தச் சிறிய கட்டுப்பாட்டை நீங்களும் ஒப்புக்கொண்டு மதிப்பீர்களென நம்புகிறேன்" என்று அந்த தீவின் தலைவன் நிபந்தனை கூறியபோது இருவரும் அதற்கு இணங்கினர்.

மாலையில் அவர்கள் கலங்கட்டும் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புறப்பட்ட சில நாழிகைத் தொலைவு அடர்ந்த புதர்களுக்கு நடுவே நடந்து செல்லவேண்டியிருக்கிறது. மூன்று நாழிகைப் பயணமும் முடிந்தபின் அவர்களுடைய கண்களை மூடிக் கட்டியிருத்த மேலாடைகள் அகற்றப்பட்டன. பார்த்தால் எதிரே கோலாகலமான வியக்கத்தக்க காட்சிகள் தென்பட்டன. அடர்ந்த நடுக் காட்டுக்குள் ஆறு ஆழப்படுத்தப்பட்டுக் கட்டிய கலங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. மரங்களை அறுப்போரும் கொல்லருமாகப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருந்தனர். ஆண்டுக் கணக்கில் கடலிலேயே மிதத்துகிடந்து திரிந்தாலும் அயராத தளராத கலங்களை அங்கு கண்டார்கள் அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/135&oldid=490062" இலிருந்து மீள்விக்கப்பட்டது