134
கபாடபுரம்
கலங்கட்டும் தளத்தை அமைத்திருந்த இடம்தான் தந்திரம் நிறைந்ததாயிருந்தது என்றால் ஏற்பாடுகளும் தந்திரம் நிறைந்தவையாயிருந்தன. காட்டுக்குள் அடர்த்தியினிடையே மறைந்திருந்ததனால் திடீரென்று கடலுக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கவும், தாக்கிய வேகத்தில் உள்வாங்கித் திரும்பி மறையவும் ஏற்ற இடத்தில் தளம் அமைந்திருந்தது. இதுபோல் சிறிய தீவின் பாதுகாப்பு அல்லது எதிரிகளைத் தாக்கும் ஏற்பாட்டிற்கு மிகமிகப் பொருத்தமான தளமாக அது இருப்பதை இருவரும் உணர்ந்தனர். வார்த்தைகளை நிறைய தொடுத்து அந்த தளத்தை அதிகமாகப் பாராட்டினால்கூட அந்தப் பாராட்டிலிருக்கும் மிகையான அம்சங்களைக் கண்டு உணர்ந்து வலிய எயினன் சந்தேகிக்கக் கூடுமென்று தயங்கி அளவான வார்த்தைகளில் பாராட்டினார்கள் அவர்கள். கப்பல்கள் யாவும் கபாடபுரத்துக் கலஞ்செய் கோட்டத்தில் படைக்கப் பெறுவனவற்றைவிட உறுதியாகவும், உழைக்க வல்லவையாகவும் இங்கு இருப்பதையும் அவர்கள் கண்டார்கள்.
மீண்டும் கலஞ்செய் நீர்நிலைக் களத்திலிருந்து திரும்பும் போது அவர்களிருவரும் கண் கட்டியே அழைத்துவரப் பட்டார்கள். பரணுக்குத் திரும்பியதும் இரண்டாவது முறையாக மீண்டும், "உங்களைப் போன்ற யாத்திரிகர்கள் ஒரு தீவின் தந்திரமான பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்டு வியப்பது இயல்பை மீறிய காரியமாகவே எனக்குத் தோன்றுகிறது?" என்று சந்தேகம் தொனிக்க வினாவிவிட்டு அவர்கள் இருவருடைய முகபாவங்களையும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். அவனுடைய கழுகுப் பார்வை அவர்களைத் துளைப்பது போலிருந்தது.
கலஞ்செய் நீர்க்களத்தை வாய்விட்டுப் பாராட்டுவதோ வியப்பதோகூட எயினர் தலைவனின் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதைக் குறிப்பறிந்துகொண்டசாரகமாரனும், முடிநாகனும்,