பக்கம்:கபாடபுரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

145


அமைதியும் இன்றி அடுத்த சோதனையை எதிர்பார்க்க வேண்டிய அவசரத்தில் இருக்கிறோம் நாம். சில காரியங்களில் வென்றுவிட்டதற்காகவோ, நிறைவு பெற்றுவிட்டதற்காகவோ, அந்த வெற்றியோ, நிறைவோ, நிகழ்ந்து முடிந்துவிட்டதாக நாம் நினைத்த மறுகணமே உடன் விரைந்து மகிழ்வதோ, பெருமிதப்படுவதோகூட அரச தந்திரமிாகாது. நம்முடைய மகிழ்ச்சியும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. நம்முடைய துயரமும் புறத்தார் அறிய வெளிப்படலாகாது. சாதுரியத்தின் கனிந்த நிலை நமது உணர்ச்சிகளின் பலங்களையும், பலவீனங்களையும், பிறர் கணிக்கவும் முடியாமல் நம்மை அநுமானத்துக்கும் அப்பாற் பட்டவர்களாக வைத்துக் கொள்ளுவதுதான்."

"அப்படி நாம் இருக்கும்போது நம்மை உய்த்துணர முயல்கிறார்கள் இங்கிருப்பவர்கள்! அப்படியில்லாமல் நாமே பலவீனமாகவும் நம்மைப் பிறர் உணரமுடிந்த வெளிப்படையான நிலையிலும் இருந்துவிட்டோமோ இன்னும் துன்பம் தான்! ஏன்தான் இந்தத் தீவுகளில் வசிக்கும் சிற்றரசர்கள் இவ்வளவு சந்தேகப்படுகிறார்களோ, தெரியவில்லையே?" என்று வினாவினான் முடிநாகன். இளைய பாண்டியன் சில விநாடிகள் அவனுக்கு மறுமொழி கூறவும் தோன்றாமல் ஏதோ சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான். பின்பு முடிநாகனை நோக்கிக் கூறத் தொடங்கினான் :

"நேருக்கு நேர் நம்மை யாரென்று உறைத்துப் பார்த்துத் தெரிந்துகொள்ளத் தயங்கி இப்படித்தான் வலிய எயினன் நம்மை இனங்கண்டுகொள்ள முயல்வான் என்ற ஐயப்பாடும் அநுமானமும் என் மனத்தில் முன்பே உண்டாகிவிட்டன. அதனால்தான் நான் முன்னெச்சரிக்கை அடைய முடிந்தது. விரைந்து மகிழ்ந்திடுதலும், விரைந்து வெகுளியடைதலும் அரசர்குடிக்கு ஆகாத செயல்கள். வீரமரபினராகிய அரசர் குடிக்குச் சிறப்பாக உரிய தன்மானமும், கோபமும் நமக்கு இருக்கின்றனவா, இல்லையா, என்பதைத்தான் வலிய எயினன் சோதித்து அறிந்துகொள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/147&oldid=490075" இலிருந்து மீள்விக்கப்பட்டது