நா. பார்த்தசாரதி
147
நாகரிகங்களும், கருணை முறைகளும் பரவவில்லை என்பதாலும், தற்காப்பு என்ற ஒரே எண்ணத்தின் அடிப்படையில் புதியவர்கள் எவரைக் கண்டாலும் துன்புறுத்துவது இயல்பாகி விட்டமையாலும் தயங்கவேண்டியிருந்தது. அதே சமயத்தில் கரையேறத் தயங்கிக் கடலிலேயே பயணத்தைத் தொடர்வதிலும் துன்பங்கள் இருந்தன. துணிந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலையில் இளைய பாண்டியனும், முடிநாகனும் இருந்தனர். கப்பல் போய்க்கொண்டிருந்த வழியிலோ சுற்றும் முற்றும் கடலிடை அங்கங்கே கரிய பெரிய பாறைகளும் சிறு சிறு குன்றுகளும் தென்பட்டன. நடுவாகச் செல்ல இருந்த வழியோ குறுகியது. காற்று அதிகமாக அதிகமாகக் கலம் அலைக்கழிக்கப்பட்டது. எந்த இடத்தில் பாறைகளில் மோதுண்டு சிதற நேரிடுமே என்ற பயமும் அதிகமாகியது. என்ன துன்பம் வருவதாயினும், அருவிலுள்ள தீவில் கரையிறங்குவது என்ற முடிவிற்கு வந்தார்கள் அவர்கள். அப்பகுதியிலுள்ள தீவுகள் மேடாகவும், பாறைகள் நிறைந்த பாங்கினதாகவும் கடல் உட்குழிந்து ஆழமானதாகவும் அமைந்திருந்ததனால் கரையோரமாக எந்த இடத்தில் கலத்தை ஒதுக்கிக்கொண்டு சென்றாலும் - குன்றுகளில் மோதாமல் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு கரைசேருவது அரிதாயிருக்கும் போலத் தோன்றியது.
ஆயினும் திறமையாகக் கலத்தை ஒதுக்கிக் கரைசேர முயன்றார்கள். கரை நெருங்க நெருங்க அந்தக் கரைப்பகுதிப் பாறைகளிலும் குன்றுகளிலும் மங்கலாகத் தெரிந்த காட்சிகள் அவர்களைத் திடுக்கிடச் செய்வனவாக இருந்தன. எந்தத் தீவின் பெயரைச் சொன்னால் அழுத பிள்ளைகளும் வாய் மூடுமோ அத்தகைய குருரமாக தீவை அணுகியிருந்தார்கள் அவர்கள். ஆயினும் அவன் அஞ்சவில்லை. தன்னிடமிருந்த மொழியறிவு தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு கரையிறங்குவதற்கான ஏற்பாடுகளிலே தயங்காமல் ஈடுபட்டான் அவன்.