பக்கம்:கபாடபுரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

13


சாரகுமாரனின் தாய் என்ற முறையில் மனம் பூரித்திருக்கிறாள். அநாகுலனுக்கும் இதில் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த மகிழ்ச்சியை அவன் வெளியிற் காட்டிக் கொள்வதில்லை. முதிய செழியர் இப்போதெல்லாம் அதிகமாக வெளியே வருவதும் போவதும் - தேர்க் கோட்டத்தில் போய்ச் சுற்றுவதும் கூட நின்று விட்டது. முதுமைத் தளர்ச்சியின் காரணமாகப் பள்ளிமாடத்திலேயே ஒடுங்கி விட்டார். இந்த ஒடுக்கமும், தளர்ச்சியுமே, மணலூரிலிருந்து பேரப்பிள்ளையை வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையையும், பாசத்தையும் அவருள்வளர்த்துவிட்டிருந்தன. மணலூர்கொற்கை - பூழி முதலிய பாண்டிய நாட்டின் வடகிழக்குப் பகுதி ஊர்களிலேயே அகத்தியரிடம் நேர்முகமாகக் கற்றுப் புலமைபெற்ற சிகண்டி, அவிநயனார், போன்ற பெரும் பெரும் புலவர்கள் எல்லாரும் இருந்ததனால் இளையபாண்டியனான சாரகுமாரனை மணலூரில் தங்கிக் குருகுலவாசம் செய்விக்க விரும்பிய அநாகுலன் அவ்வாறே செய்திருந்தான்.

தந்தை முதிய செழியரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி நகர் மங்கல விழாவன்று இளைய பாண்டியன் சாரகுமாரனையும் அவனுக்கு ஆசிரியர்களான சிகண்டியாரையும் அவிநயனாரையும் கோநகருக்கு அழைத்து வருமாறு மணலூருக்கு விரைந்து சென்று அழைத்துவர வல்ல பரிகள் பூட்டிய தேர் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. மறுநாள் நகரணி மங்கல நாளா கையினால் கபாடபுரத்திலிருந்து மணலூர்வரை பொருநை நதிக்கரையை ஒட்டினாற் போலவே செல்லும் பெரும் பாண்டிய ராஜ பாட்டையில் எங்கு பார்த்தாலும் திருவிழாக் கூட்டமாயிருந்தது. கடலொடு கலப்பதற்காகப் பெருகி விரையும் பொருநையைப் போலவே கபாடபுரத்தின் விழாக்கோலத்தோடு போய்க் கலப்பதற்காக மக்கள் வெள்ளம் பெருகி ஓடிக் கொண்டிருந்த இந்தப் பெருவழிகளில் கவனமாக முயன்று எவ்வளவு வேகமாகச் செலுத்தியும் அந்தி மயங்குகிற நேரத்துக்குத் தான் தேர்ப்பாகனால் மணலூரில் சிகண்டியாரும் அவிநயனாரும் வாழ்ந்து வந்த நதிக்கரைத் தோட்டத்தை அடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/15&oldid=489914" இலிருந்து மீள்விக்கப்பட்டது