150
கபாடபுரம்
யாவும் நமது பாவனையின் பிரதிபிம்பங்களாகவே இருக்கும். கவலைப்படாமல் தயங்காமல் முன்னேறலாம் வா!" என்று முடிநாகனுக்கு இளையபாண்டியன் உறுதிகூறியும் அவனுடைய பயமும் நடுக்கமும் குறையவில்லை.
குருதி முட்களைப்போல் காலில் கடுமையாகக் குத்தும் சிவந்த பாறைகளிலும், கற்களிலும் மிதித்து மிதித்து நடந்தார்கள் அவர்கள். தொலைவில் ஒரு காட்சி தெரிந்தது. கூட்டமாக அந்தத் தீவின் மனிதர்கள் ஒரு சிவப்பு மேடையில் எரிந்துகொண்டிருந்த தீயைச்சுற்றிக் கூத்தாடிக் கொண்டே வெறிமிகுந்த குரலில் ஏதோ பாடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரலிலும் கூத்திலும் பண்படையாத காட்டுக் குரூரம் மட்டுமே நிறைந்திருந்தது. தொலைவிலிருந்து அதைக் கேட்கும்போதே அருகில் செல்ல அஞ்சி நடுங்கி ஓடிவிட வேண்டும் போலிருந்தது. பண்படாமல் கரடு முரடாக இருந்த அந்தத் தீவின் காலைக்குத்தும் கற்களைப் போல் கேட்கும் செவிகளைக் குத்திக் கிழிப்பது போலிருந்தது அந்த ஒசை. அருகில் நெருங்கப் பூதாகாரமான மனிதர்களின் தடித்த உருவங்கள் கபாலங்களை அணிந்து இடுகாட்டுப் பேய்க் கணங்கள்போல் குதிக்கும் காட்சி தெளிவாகத் தெரியலாயிற்று. அவர்களோ வெறிமயமான கூத்தில் வட்டவடிவமாகக் கைகோத்து மேடையில் எரியும் தீயைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்ததனால் இவர்கள் இருவரும் வந்ததைக் கவனித்ததாகவே தெரியவில்லை.
இளையபாண்டியன் தைரியமாகவும், துணிவாகவும், முன்னேறிக்கொண்டிருந்தாலும் அவனைப் பின்தொடர்ந்து சென்ற முடிநாகன் அதே வேகத்தில் பின் தொடராமல் தயங்கித் தயங்கித்தான் நடந்தான். இந்த நிலையைக் கவனித்து உணர்ந்து கொண்ட இளையபாண்டியன் முடிநாகனைத் துணிவூட்டுவதற்காகவும், பாறைக்கற்களில் நடந்து நடந்து இசிவெடுத்து வலிக்கும் கால்களுக்கு ஓய்வளிப்பதற்காகவும் ஒரு காரியம் செய்தான். அந்த இடத்தினருகே இலைகளே இல்லாமல் கள்ளிக்கொடிபோல் படர்ந்து அடர்ந்து உயரமாகச் செழித்திருந்த ஒரு புதரருகே முடிநாகனையும் அமரச் சொல்லிக்