பக்கம்:கபாடபுரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

கபாடபுரம்


காரியம் சுற்றியிருந்த எல்லாக் கொலை மறவர்களையும் வியப்பிலாழ்த்தியது. தங்கள் தலைவனிடம் இப்படி ஒரு பெரிய மாறுதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.


24. புதிய இசையிலக்கணம்

இரண்டுவிதமான இசைகளால் கொடுந்தீவுக் கொலை மறவர்களையும் அவர்கள் தலைவனையும் சாரகுமாரன் வசப்படுத்தினான். பாடலுக்கும், புகழுக்கும், சேர்த்தே இசை என்று இசைவாகத் தமிழில் பெயர் சூட்டியவர்களை வாயார வாழ்த்தினான் அவன். திரும்பத் திரும்ப மீட்டினாலும், பாடினாலும் கேட்பவனுக்குச் சோர்வு தராமல் அவனை வசீகரம் செய்யும் இசையைப்போலத் திரும்பத் திரும்பச் சொல்லிப் புகழ்ந்தாலும் சொல்லப்படுகிறவனை வசீகரிப்பது என்ற காரணத்தால் தான் புகழும் இசைப்பெயர் பெற்றிருக்க வேண்டுமென்று சிந்தித்தான் சாரகுமாரன்.

அந்தத் தீவின் பாறைகளில் ஏறிக் கபாலங்களையும் உடைந்த எலும்புகளையும் பார்த்துக்கொண்டே நுழைந்த போது ஏற்பட்டிருந்த திகிலும், நடுக்கமும் இப்போது முடிநாகனிடம் இல்லை. மனிதனின் கல்மனத்தையும் இளகச் செய்து கருணைமயமாகச் செய்யும் அபூர்வமான ஆற்றல் இளைய பாண்டியருடைய குரலுக்கு இருப்பதைப் பல சமயங்களில் உணர்ந்திருந்தாலும் இன்று அதை மிக அதிகமாக உணர்ந்தான் முடிநாகன். மொழியும், பொருளும் மனிதனுக்குரிய நாகரிக உணர்வுகளும் சிறிதேனும் புரியாத ஒரு கொடிய காட்டுக் கூட்டத்தைக்கூட வசப்படுத்திவிட முடிந்த அந்தக் குரலுக்குரிய சாரகுமாரனைத் திடீரென்று அந்நியமாக விலக்கி ஒரு கலைஞனுக்குரிய உயரத்தில் வைத்துச் சிந்தித்த போது முடிநாகனின் வியப்பு எல்லையற்றதாயிருந்தது.

கொடுந்தீவு மறவர் தலைவன் தனக்குச் சமமாக இளைய பாண்டியனுக்கும், முடிநாகனுக்கும், அமர்வதற்கு இருக்கைகள் அளித்தான். காவியேறிய கோரப்பற்களைத் திறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/156&oldid=490084" இலிருந்து மீள்விக்கப்பட்டது