பக்கம்:கபாடபுரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

155

இளையபாண்டியனை நோக்கி அவன் மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அடையாளமாக நகைத்த நகையே பயங்கரமாக இருந்தது. தங்கள் வழக்கப்படி ஊனும், கள்ளும் கொடுத்து இளையபாண்டியனையும், முடிநாகனையும் உபசரிக்கத் தொடங்கினான் அவன். இளைய பாண்டியனும், முடிநாகனும் அவற்றை உண்ணவும் பருகவும் அருவருத்ததைக் கண்ட அவன் விதம் விதமான தோற்றங்களையும் வேறு வேறு நிறங்களையும் உடைய பல கனிகளை வரவழைத்து அவர்கள் இருவருக்கும் அளித்தான்.

"ஏதோ மந்திரத்தால் எங்களையெல்லாம் வசியப்படுத்தி விட்டாய்" என்று பண்படாத தன் மொழியில் இளைய பாண்டியனைப் புகழத் தொடங்கினான் அந்தக் கொடுமறவர் தலைவன். தான் பாடியது இசை என்றும் அது ஒரு கலை என்றும் இளையபாண்டியன் அவனுக்கு விளக்க முயன்றதெல்லாம் வீணாயிற்று. அவனோ விடாப்பிடியாக அதை மந்திரம் என்றே புகழ்ந்தான். அந்தக் கொடியமனிதனிடம் அவன் கூற்றை அதிகமாக முனைந்து மறுக்க முயல்வதுகூடப் பகைமையை உண்டாக்குமோ என்ற தயக்கத்தில் பேசாமலிருந்துவிட்டான் இளையபாண்டியன். பரிசுகள் என்ற பெயரில் மிருகங்களின் கொம்புகளினாலும் தோலினாலும் செய்த பல விநோதமான பொருள்களை இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அளித்தான் அந்தத் தீவின் தலைவன். அவற்றை மறுக்காமல் இருவரும் ஏற்றுக்கொண்டனர்.

கொடிய முரட்டு மனிதர்களிடம் அவர்களது அன்பையும், உபசரிப்பையும் மதியாததுபோல் அசிரத்தையாக நடந்துகொண்டாலும் நல்ல விளைவு இருக்காது. அன்பைக் கூட அதிகாரத்தோடு பயமுறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்கிற மனிதர்கள் உண்டு. அந்த அதிகாரத்தையும், பயமுறுத்தலையும் இலட்சியம் செய்யாததுபோல் இருந்தால்கூட அப்படிப் பட்டவர்களுக்கு உடனே விளைகிற கோபம் பயங்கரமானதாக இருக்கும். எதற்கும் தயங்கமாட்டார்கள் அவர்கள். அதிகாரம் செய்யாமலோ, பயமுறுத்தாமலோ அன்பைக்கூட அவர்களால் செய்யமுடியாது. இந்த இயல்பை நன்றாகப் புரிந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/157&oldid=490085" இலிருந்து மீள்விக்கப்பட்டது