பக்கம்:கபாடபுரம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கபாடபுரம்


இளையபாண்டியனும் முடிநாகனும் நடந்து கொண்டார்கள். அந்தக் காட்டுமனிதர்களின் உண்டியும் ஆடலும் கூத்தும், குரவையும், விடிய விடிய நடந்தன. விடிகிற நேரத்துக்கு உறக்கம் சோர்ந்த விழிகளோடு அந்தத் தீவின் தலைவனிடம் விடைபெற நின்றார்கள் அவர்கள். அவனோதன் கூட்டத்தாரோடு கரைவரை வந்து அவர்களை வழியனுப்பச் சித்தமாயிருந்தான்.

விகாரமான கூக்குரல்களுடனும், கோலங்களுடனும் உடன்வரும் அந்தக் காட்டுக் கூட்டத்தோடு நடந்துசெல்வதே விரும்பத்தகாததாக இருந்தது. இறுதியாக அவர்களுக்கு விடைகொடுக்கும்போதுகூட அந்தக் காட்டுத்தீவின் தலைவன், "இங்குவந்து உயிருடன் தப்பிச் செல்கிற மானிடர் அரிதினும் அரியவர். நீ ஏதோ உன் குரலினால் எங்களுக்கு மந்திரம் போட்டுவிட்டாய். அதனால்தான் உன்னைக் கொல்லத் தோன்றவில்லை" என்று மறுபடியும் கூறினான். "மறுபடி எப்போதாவது இந்தப் பக்கம் வந்தால் எங்களைப் பார்த்து மந்திரம் போட்டுவிட்டுப்போ" என்று அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டே பாறைகளில் கீழிறங்கிக் கப்பலை நோக்கி விரைந்தார்கள். அவர்கள் கப்பலில் ஏறின. பின்பே இருவரும் சுபாவமாக மூச்சுவிட முடிந்தது. அந்தத் தீவிலிருந்து உயிர்தப்பிக் கப்பலேறிவிட்டோம்" என்பது அவ்வளவிற்கு நம்பமுடியாதபடி இருந்தது. கப்பல் புறப்பட்டதும் முடிநாகன் இளையபாண்டியனை வியந்து புகழ்ந்து உரைக்கலானான் :

"இளையபாண்டியரே! நீங்கள் பாடுகிற இசைக்கென்றே புதிய இலக்கணம் ஒன்று இனிமேல் உண்டாக்கவேண்டும். பழைய இசையிலக்கணம் உங்களுடைய கலையின் எல்லையற்ற நயங்களை எல்லாம் வகுத்துக் கூறுகிற அளவு விரிவானதோ வகையானதோ அன்று. எனவே சிகண்டியாசிரியரைப் போன்ற இசை வல்லுநர்கள் உங்களை மனத்திற்கொண்டே ஒரு புதிய இசையிலக்கணம் காணவேண்டும். ஒன்றும் புரியாத காரணத்தால் இந்தக் கொடுந்தீவின் தலைவன் இதை மந்திரம் என்று புகழ்ந்தானே; அது முற்றிலும் பொருத்தமானதுதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/158&oldid=490086" இலிருந்து மீள்விக்கப்பட்டது