பக்கம்:கபாடபுரம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

கபாடபுரம்


பெரிய தீவில் இரண்டு பேரோ, மூன்று பேரோ மட்டுமே ஆண்மக்கள் இருப்பதாக அவர்கள் கேள்விப்பட்டனர். அந்த இரு வரையும் அவர்கள் தங்கள் கண்களால் பார்க்கவில்லை. கற்பூரத்தீவும் ஒரு விந்தையாகவே இருந்தது. அந்தத் தீவின் பெண்மக்களே வில்லும் அம்பும் எடுத்துக் குறிபார்த்து எய்வதில் வல்லவர்களாக இருந்தனர் என்பதையும் அவர்கள் கண்டனர்.

கற்பூரத் தீவின் பெண்கள் அவர்களை ஏதோ அபூர்வ விலங்குகளைப் பார்ப்பதுபோதுபோல் வெறித்து வெறித்துப் பார்த்தனர். குறிப்பிடத்தக்க எந்தப் பயமும் அந்தத் தீவிலே இல்லை. மறுநாள் பொழுது விடிந்து அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது கரையில் அந்தத் தீவின் பெண்கள் கூட்டமெல்லாம். ஏதோ விநோதத்தைக் காண்பதுபோல் கூடிவிட்டது. மறுநாள் பயணத்தின்போது தங்கச் சுரங்கங்கள் நிறைந்த ஆடகத்தீவு குறுக்கிட்டது. ஆனால் அந்தத் தீவில் அவர்கள் இருவரையும், அவர்கள் கப்பலையுமே அருகில் கூட வரவிடாமல் தடுத்துவிட்டார்கள். தங்கத் தீவுக்காரர்கள் அந்நியர் வரவையே தடை செய்திருந்தனர். யாரும் தீவையே நெருங்கிவிடாதபடி சுற்றிலும் போர் மரக்கலங்களை வீரர்களோடு காவலுக்கு நிறுத்திவைத்திருந்தனர். ஆடகத் தீவில் இறங்கிப் பார்க்கவேண்டுமென்று இளையபாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் எவ்வளவோ ஆசையிருந்தும், அது முடியவில்லை. உடனே நிராசையோடு முடிநாகன் கூறலுற்றான் :

"இந்தத் தீவுகளை எல்லாம் ஒன்றுசேர்த்து ஒரு பெரும் கடற்படையெடுப்பின் மூலம் இவற்றை வென்று பாண்டி நாட்டின் கீழே அடக்கிக்கொண்டு வந்துவிடவேண்டுமென்று தங்கள் பாட்டனாருக்கு ஆசை இருக்கிறது. அந்த ஆசை தங்கள் காலத்திலாவது நிறைவேறுமோ என்ற நம்பிக்கையில்தான் இப்படியெல்லாம் உங்களைப் பயணம் அனுப்பியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட ஒரு முழுப் பேராசையை வெற்றி கொண்டாலும் கொள்ளலாமே தவிர இப்படிப்பட்ட தனித் தனித் தீவுகளை வென்று சேர்ப்பது என்பது அசாத்திய மானது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/160&oldid=490088" இலிருந்து மீள்விக்கப்பட்டது