பக்கம்:கபாடபுரம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கபாடபுரம்


"நமது கடற்படையை வலிமையுடையதாக்கி எப்போதாவது இந்தத் தென்பழந்தீவுகளை எல்லாம் கைப்பற்றி அடக்கிப் பாண்டி நாட்டினோடு சேர்க்க முயன்றால் வெற்றி கிடைக்குமா? கிடைக்காதா? உன் கருத்து என்ன?" என்று முதியபாண்டியர் கேட்டபோது அதற்கு இளைய பாண்டியன் மறுமொழி கூறத் தயங்கி இருந்தான். ஆனால் முடிநாகன் உடனே முன்வந்து, "முதியபாண்டியர் திட்டமிட்டு யோசனை கூறிச்செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்" என்று உறுதியான குரலில் கூறினான். மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு முதிய பாண்டியர் விடை கொடுத்தார்.

உடனே சிகண்டியாசிரியர்பால் சென்றான் சாரகுமாரன். சிகண்டியாசிரியரிடம் கொடுந்தீவில் தனக்கு ஏற்பட்ட இசை அனுபவத்தை அவன் கூறியபோது அவர் வியந்தார். இசையின் விந்தைகளில் இது ஒரு புதிய சாதனை என்று கூறி அங்கு நிகழ்ந்ததைப்பற்றி விவரமாகக் கூறச்செய்து மீண்டும் கேட்டார். கேட்டவர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். ஏதோ பெரிய காரியத்துக்கான சிந்தனை அவர் மனத்தில் உருவாகிறது என்பதை முகபாவத்திலிருந்து தெரிந்து கொள்ளமுடிந்தது.

"இசைத்துறையில் ஒரு புதிய ஆராய்ச்சி செய்ய இந்த நிகழ்ச்சி ஒரு தொடக்கம் உன் வாழ்விலும் இதனால் ஒரு புதிய பெரும்பயன் விளையப் போகிறது பார்" என்று சிறிது நேரத்தில் வியந்து கூறினார் சிகண்டியாசிரியர். சாரகுமாரனுக்கு அதைக் கேட்டு மெய்சிலிர்த்தது.

"மந்திரம் என்று அந்தக் கொடுந்தீவு மறவன் உன்னுடைய இசையைப் புகழ்ந்தது ஒருநாளும் விண்போகாது பார்!" என்று மேலும் சிகண்டியாசிரியர் உற்சாகமாகக் கூறியபோது இளையபாண்டியனுக்கு மறுபடி மெய்சிலிர்த்தது. தன் வாழ்வில் இந்த நிகழ்ச்சி ஏதோ பெரிய மாறுதலை ஏற்படுத்தப்போகிறது என்பதுபோல் தனக்குத்தானே ஒர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/164&oldid=490092" இலிருந்து மீள்விக்கப்பட்டது