பக்கம்:கபாடபுரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

167


"பிறரைப் பயப்படவைப்பவர்கள் பயப்படுவதற்கு என்ன இருக்கிறது?..."

"கூறுவது தவறு! நான் யாரையும் பயப்படவைக்கிறவனில்லை..."

"இருந்தாற்போலிருந்து மறைகிறவர்களும் - இருந்தாற் போலிருந்து தோன்றுகிறவர்களும் பயப்படவைக்கிறவர்கள் தாமே?”

"சந்தர்ப்பம் அப்படி நேர்ந்துவிட்டது! அது என் தவறில்லை" என்று கூறிய இளையபாண்டியன் எயினர் தீவின் இயற்கையழகைக் கண்ட வேளையில் அவனை நினைவுகூர்ந்ததையும் பிற பயண அநுபவங்களையும் தொடர்ந்து கூறலானான். அவன் கூறியவற்றைக் கேட்கக் கேட்க அவள் சினம் சிறிது சிறிதாக அடங்கியது.

"இன்னும் ஒரு திங்கள் காலத்தில் இங்கிருந்து புறப்படவேண்டுமென்று என் பெற்றோர் முடிவுசெய்துள்ளனர்" என்றாள் அவள். அவள் குரலில் கவலை ஒலித்தது.

"அதற்குள் எவ்வளவோ நடக்கும்" என்று புன்சிரிப்போடு அவளுக்கு மறுமொழி கூறினான் அவன். இப்படியே சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்தார்கள் அவர்கள். மறுபடி அடுத்த நாள் அவளைச் சந்திப்பதாகக் கூறினான் அவன்.

அரண்மனை திரும்பியதுமே அவன் சிகண்டியாசிரியரைச் சந்தித்து அன்று வைகறையில் தான் கடற்கரையில் கேட்ட நெய்தற்பண்ணின் புது நயங்களை விவரித்தான்.

சிகண்டியாசிரியரும் அதனை ஆர்வத்தோடு கேட்டார்.

"இசையில் பல்லாயிரம் நுணுக்கங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி இயல்பை மீறிய அபூர்வத்திறமைகளை விளக்கும் புதிய இசையிலக்கணம் ஒன்றை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/169&oldid=490099" இலிருந்து மீள்விக்கப்பட்டது