பக்கம்:கபாடபுரம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

177

படைப்பாளியின் சாதனை எல்லை என்கிற உயரத்தை அடையமுடியாமல் சில வேளைகளில் இலட்சணங்களை வரையறுத்துச் சொல்லுகிற இலக்கண ஆசிரியரின் கீழ் எல்லையிலேயே தளர்ந்து நின்றுவிடுவதும் உண்டு. அப்படித் தளர்ந்து நின்று விடுவதனால் அந்தக் கலையின் எதிர்காலத்துக்கு வளர்ந்துவரும் புதிய மரபுகள் சொல்லப்படாமலே போய்விடும். அந்த நிலை ஏற்பட்டுவிடலாகாதே என்பதற்காகத்தான் சிகண்டியாசிரியர் இசைநுணுக்க இலக்கணத்தை விரைந்து இயற்றிக்கொண்டிருந்தார். அந்த இலக்கணத்தை அவர் இயற்றுகையில் பெரும்பான்மை நேரம் சாரகுமாரனும் அவருடன் கூடவே இருந்தான். பெரியபாண்டியரோடு தாம் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றுவந்த செய்தியைச் சிகண்டியாசிரியர் சாரகுமாரனிடம் கூறவில்லை. சாரகுமாரன் மட்டும் முடிநாகனுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில காலை வேளைகளிலும், சில மாலை வேளைகளிலும் கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சென்றுவந்தான். அப்படிச் சென்று கண்ணுக்கினியாளைச் சந்தித்தபோதும் அவளிடம் ஆழமான மாறுதல் ஒன்றை உணர்ந்தான் அவன்.

சிரிப்பும், மகிழ்ச்சியும், கலகலப்பான உரையாடலும் அற்றுக் கவலை நிறைந்தவளாய்த் தென்பட்டாள் அவள். அந்த மாறுதலைப் புரிந்துகொள்ளவும் முடியாமல், வினாவித் தெரிந்துகொள்ளவும் இயலாமல் வேதனைப்பட்டான் சாரகுமாரன். கபாடபுரத்திலிருந்து தாங்கள் வேறு ஊருக்குப் புறப்படப் போவதைப் பற்றியே அவனைச் சந்திக்க நேரும் போதெல்லாம் பேசிக்கொண்டிருந்தாள் அவள் சாரகுமாரனுக்கு இது புதுமையாக இருந்ததோடல்லாமல் மனவருத்தத்தை அளிப்பதாகவும் இருந்தது. மனத்திற்குள்ளேயே துயரப்பட்டான் அவன். சிகண்டியாசிரியர் பெரியபாண்டியரை அவளிடம் அழைத்துச் சென்றிருந்ததையும் அவர் அவளிடம் வினாவிய வினாக்களையும் கூயிருந்தாரானால் சாரகுமாரனுக்கு அவளுடைய இந்த மாறுதலுக்கான காரணங்கள் எல்லாம் தெளிவாகப் புரிந்திருக்கும். அதையும் அவர் கூறாததால் ஒன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/179&oldid=490110" இலிருந்து மீள்விக்கப்பட்டது