பக்கம்:கபாடபுரம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

179


இந்த அரங்கேற்றத்தைப்பற்றி விவரித்துக் கூறலாம் என்றாலோ பெரியபாண்டியர் வெண்தேர்ச் செழியரின் விருப்பத்துக்கு மாறாக அநாகுலனும் ஒரு காரியத்தைச் செய்யமாட்டான் என்பது சிகண்டியாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எனவே பெரியபாண்டியரையே தேடிச் சென்றார் அவர். பெரியபாண்டியர் சிகண்டியாசிரியரை வரவேற்ற விதமே இசையைப் பற்றியோ, கலைகளைப் பற்றியோ, கடற்கரைப் புன்னைமரத் தோட்டத்தில் தங்கியிருக்கும் பாண்மகளைப் பற்றியோ எதையும் என்னிடம் சொல்லிவிடாதே என்பதுபோல் இருந்தது.

"தென்பழந்தீவுகள் அனைத்தையும் ஒரு வலிமைவாய்ந்த கடற்படையை அனுப்பி வெற்றிகொண்டு நேராகக் கபாடபுரக் கோ நகரின் ஆட்சிக்குக் கீழே கொணர்ந்து பாண்டியர் வலிமையைப் பலப்படுத்திவிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் ஒரு வழி புலப்படவில்லை. தென்கடலில் தனித் தனியே சிதறுண்டுகிடக்கும் அந்தத் தீவுகளை ஒரிரு நாட்களில் வெற்றிகொள்வதும் சாத்தியமென்று தோன்றவில்லை. அதிக நாட்களும், அதிக முயற்சியும், அதிகப் பொறுமையும் அந்தக் காரியத்திற்குத் தேவைப்படும். அநாகுலனை அனுப்பலாமென்றாலோ, அவ்வளவு அதிக நாட்கள் அவன் கோ நகரத்தில் இல்லாமல் வெளியே தீவுகளுக்குப் போவது நல்லதல்ல. நானே போகலாமென்றாலோ என்னுடைய முதுமையும், தளர்ச்சியும் அதற்கு ஏற்றவையல்ல. இந்த நிலையில் இந்தப் படையெடுப்பிற்குத் தலைமையேற்கச் சாரகுமாரன் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை. முன்பே அதை மனத்திற்கொண்டுதான் அவனையும், முடிநாகனையும் தென்பழந்தீவுகளில் ஒருமுறை சுற்றிவருமாறு செய்தேன். ஆனால் அவனோ இன்னும் அரசியற் பொறுப்புக்களில் அக்கறையற்றவனாகத் தோன்றுகிறான்.

ஒர் அரசன் போரற்ற அமைதிக் காலங்களில் மட்டுமே கலைகளின் இரசிகனாக இருக்கலாமே அன்றிப் போர்க்காலங்களில் கலைகளை மறக்கவும் தெரியவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/181&oldid=490112" இலிருந்து மீள்விக்கப்பட்டது