பக்கம்:கபாடபுரம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

கபாடபுரம்


இரசிகனாக இருப்பதற்கும் மேலாக அவனே கலைஞனாக இருப்பதோ, கவிஞனாகவே வளரவிரும்புவதோ அவனைப் பெற்ற அரசகுடும்பத்துக்கு எவ்வளவிற்குப் பயன்படாமல் போகுமென்பதை உங்களைப்போன்ற புலவர்களால் ஒருபோதும் உணரமுடிவதில்லை. ஆனால் என் போன்றவர்களோ ஒவ்வொரு விநாடியும் அதை மட்டுமே உணர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். கலைகள் மனித இதயத்தை நெகிழச்செய்து நளினமாக்கிவிடுகின்றன. ஒரு மனம் அப்படி நெகிழ்ந்து நளினமாவதனால் அது ராஜதந்திர நினைவுகளுக்கோ, அரசியற் சூழ்ச்சிகளுக்கோ பயன்படாமல் போகிறது" என்று கவலை தோய்ந்த குரலில் பெரியபாண்டியர் தன்னிடம் வருத்தப்பட்டபோது தான் வந்த காரியத்தை அவரிடம் கூறுவதற்கு ஏற்ற சமயம் அதுதானா இல்லையா என்பதைக் கணிக்க முடியாமல் தயங்கியபடியே பேசாமல் இருந்தார் சிகண்டியாசிரியர். பெரியபாண்டியரோ அவருடைய தயக்கத்தைத் தமக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு மேலும் தொடர்ந்து குறைபடத் தொடங்கிவிட்டார்.

"மனம் அரசதந்திரத்திற்கு ஏற்றதாக வாய்க்காத காரணத்தினாலேயே அப்படிப்பட்ட அரசகுமாரர்களைப் பெற நேர்ந்த பல அரச குடும்பங்கள் பெருமையழிந்து மரபு கெட்டிருக்கின்றன. தென்பழந்தீவுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பியபின் அந்தத் தீவுகளை வென்று அடக்கி வலிமை மிக்கதொரு பாண்டியப் பேரரசை உருவாக்கவேண்டியதைப் பற்றித் தானாகவே என்னிடம் பேசவருவான் வருவானென்று சாரகுமார்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான். அவனோ காலையும், மாலையும், தேரிலும் புரவியிலுமாக மாற்றி மாற்றிக் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறான். இந்த நிலையிலேயே நீங்கள் வேறு இசையிலக்கணம் ஏதோ இயற்றிக் கொண்டிருக்கிறீர்களாம்..." என்று அவர் கூறிக்கொண்டே வந்தபோது அது தான் சமயமென்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/182&oldid=490113" இலிருந்து மீள்விக்கப்பட்டது