பக்கம்:கபாடபுரம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கபாடபுரம்


பெருமக்கள் நிரம்பிய பேரவையிலே அரங்கேற்ற இணங்கினார் பெரிய பாண்டியர். உடனே அதற்கான மங்கல நாளும் குறிக்கப்பெற்றது. நகரணி மங்கல விழா முடிந்த உடனே மீண்டும் இத்தகைய பெருவிழா ஒன்று கோ நகரில் நிகழ இருப்பதைக் கேட்டுச் சங்கப் புலவர்களும், அறிஞர் பெருமக்களும் இரட்டை மகிழ்ச்சி அடைந்தனர். செய்தியை நகருக்கு முரசெறிந்து தெரிவிக்கும் கடமையுடையவர்கள் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் ஏறி வீதிவீதியாகப் பரப்பினார்கள்.

"இளைய பாண்டியர் சாரகுமாரருக்குப் புதிய இசையறிவிக்கும் பொருட்டுச் சிகண்டியாசிரியர் இயற்றியிருக்கும் இசைப் பேரிலக்கணம் அரங்கேற இருக்கிறது" என்ற செய்தி நாலா திசைகளிலும் நகரில் பரவியது. பாணர்கள் தங்கியிருந்த கடற்கரைப் புன்னைத் தோட்டத்திலும் செய்தி அறிவிக்கப்பெற்றுப் பரவியிருந்ததில் வியப்பில்லை. எல்லாப் பாணர்களுக்கும் மகிழ்ச்சியை விதைத்த இச்செய்தி ஒரே ஒருத்தியின் இதயத்தில் மட்டும் இனம்புரியாத கவலையை உண்டாக்கியது. பிறருக்கு விண்டுசொல்லி அவர்களுடன் பங்கிட்டுக்கொள்ள முடியாத வேதனையாயிருந்தது அது. விழா நிகழும் முன்பாகவே தானும் தன் பெற்றோரும் கபாடபுரத்தை விட்டுப் புறப்பட்டுவிடலாமா என்றுகூடத் தோன்றியது அவளுக்கு. ஆனால் கூட்டம் கூட்டமாக ஓரிடத்தை விட்டு மற்றோர் இடத்திற்குப் பயணம் செய்யும் வழக்கத்தையுடைய பாணர்கள் - எல்லோரும் சேர்ந்து புறப்பட்டாலொழியத் தனியே புறப்பட இயலாது. அப்படிப் புறப்படுவதனால் தனிவழிப் பயணத்தில் பல துன்பங்கள் வரும். எனவே நகரணி மங்கல விழாவுக்கு வந்து அப்படியே தொடர்ந்து தங்கிய எல்லாப் பாணர் கூட்டமும் மிகச் சில நாட்களில் நடைபெற இருக்கும் சிகண்டியாசியரின் இசையிலக்கண அரங்கேற்ற விழாவுக்கும் இருந்து கண்ட பின்பே புறப்பட எண்ணினர்.

'இடத்தின்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம். மனிதர்கள்மேல் பிரியப்பட்டுச் சிலர் தங்கிவிடலாம்' என்று பெரியபாண்டியர் தன்னிடம் இரைந்துவிட்டுப் போனதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/184&oldid=490115" இலிருந்து மீள்விக்கப்பட்டது