பக்கம்:கபாடபுரம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

187

நிலையிலும் இருந்தார். முடிநாகனை அருகே கூப்பிட்டு அரங்கேற்று விழாவிற்குக் கண்ணுக்கினியாளும் அவள் பெற்றோரும் வந்திருக்கிறார்களா இல்லையா என்று பார்த்து அறிந்து வரச்சொல்லலாம் என்று இளையபாண்டியன் எண்ணினாலும் அவ்வாறு செய்ய முடியாமலிருந்தது. ஒரு புறம் சிகண்டியாரும் மறுபுறம் பெரியபாண்டியரும் அமர்ந்து அவனைச் சிறை வைத்ததுபோலிருந்த அந்தச் சூழ்நிலையில் முடிநாகனை அருகே கூப்பிடவும் இயலாதுபோல் தோன்றியது.

கண்ணுக்கினியாள் வந்திருக்கிறாளா இல்லையா என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமோ கட்டுக்கு அடங்குவதாக இல்லை. வாழ்க்கையின் உயரத்திலிருக்கும் ஒருவன் அதன் கீழிருக்கும் தன்னுடைய அந்தரங்கமான சினேகிதனையோ, சிநேகிதியையோ, காணுகிற அளவு இறங்கி வரமுடியாமற் போவதுபோல் கொடுமை வேறொன்றுமில்லை என்று தோன்றியது இளையபாண்டியனுக்கு. புலவர்களின் பாயிரம், சிறப்புப் பாயிரங்களுடன் நூல் அரங்கேற்றம் தொடங்கியது. சிகண்டியாசிரியர் - பாண்டியர் தலைநகரையும், பெரியபாண்டியரையும், அநாகுலனையும் புகழ்ந்து பாடியபின், இளைய பாண்டியர் சாரகுமாரருக்கு இசைநுணுக்கம் அறிவிப்பதன் பொருட்டு அந்நூல் இயற்றப்படுவதாகவும் தொடங்கி நூற்பாக்களை ஒவ்வொன்றாகக் கூறி விளக்கி அரங்கேற்றலானார். சில பண்வரம்புகளுக்கு ஏற்ப இளையபாண்டியனே அங்கு பாடியும் காண்பித்தான். புலவர் பெருமக்கள் சிகண்டியாசிரியரை நோக்கி ஐய வினாக்களையும், தடை வினாக்களையும் எழுப்பினர். அவற்றுக்கெல்லாம் சிகண்டியார் மறுமொழி கூறினார். இளையபாண்டியன் மன நிம்மதியில்லாமல் அங்கிருந்தான். அவனுடைய கண்கள் கூட்டத்தையே துழாவிக் கொண்டிருந்தன.

இறுதியில் ஒருவாறாகத் தன் மனத்துக்கு இனியவளாகிய கண்ணுக்கினியாள் நின்றுகொண்டிருந்த இடத்தையும் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/189&oldid=490120" இலிருந்து மீள்விக்கப்பட்டது