பக்கம்:கபாடபுரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

17


கண்டாலும் முகம் மலர இளமை பொங்க அவர் நின்று பேசுவதை இரண்டு கணம் செவியாரக் கேட்டு மகிழ்ந்துவிட்டே அப்பால் நகர வேண்டுமென்பதுபோல் ஒர் இனிய வசீகரம் அல்லது முகராசி சாரகுமாரனுக்கு இருந்தது. சாரகுமாரனின் தாய் திலோத்தமைக்கு இப்படி ஒரு முகவசீகரம் உண்டு. அதுவாவது பெண்மையின் இயல்பான பொலிவு என்று தோன்றி அமைதிபெறும். ஆனால் சார குமாரனின் அழகோ, பொலிவோ, நிறமோ, தந்தையின் கம்பீரமும் தாயின் எழிலும் கலந்த அற்புதத் தோற்றத்தோடு கூடியனவா யிருந்தன. தந்தை அநாகுல பாண்டியரின் ஆஜானுபாகுவான உயரமும் காம்பீர்யமும் தாய் திலோத்தமையின் அழகும் நிறமுமாகச்சாரகுமாரன் நடந்து வரும் போது அவனுடைய பாட்டனார் வெண்தேர்ச் செழியர் அரும் பாடுபட்டு உருவாக்கிய சிறந்த முதல் தரமான முத்துத் தேர் ஒன்று பொன்னிறம் பெற்று நடந்து வருவதுபோல் ஒரு வசீகரத் தோற்றம் உண்டாகும். அதுவும் இப்போது இந்த இருள் மயங்கும் அந்தி வேளையில் எளிமையான குருகுல வாசத்துக் கோலத்தில் மிக வனப்பான சிகண்டியாரின் நதிக்கரைப் பொழில் வீட்டின் சூழ்நிலையில் கையில் ஏடுகளுடனும் முகத்தில் புன்னகையுடனும் கந்தர்வ இளைஞனைப் போலவே தோற்றமளித்தான் சாரகுமாரன்.

இளைய பாண்டியரின் பேரழகை - வியந்த நிலையில் பரிகளைத் தேர்ப் பூட்டிலிருந்து - ஒய்வு கொள்ளப் பிரித்துத் தனியே விட்டுவிட்டு முடிநாகனின் பார்வை நதிக்கரைப் பக்கமாகத் திரும்பியபோது சிகண்டியாரும், அவிநயனாரும், பேசியபடியே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. முது பெரும் புலவர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கினான் தேர்ப்பாகன் முடிநாகன். புலவர்கள் அரண்மனையிலுள்ள அனைவரின் நலனையும் அன்போடு அவனிடம் கேட்டறிந்தனர். "குமாரபாண்டியரோடு தாங்களிருவரும் கூட நகரணி மங்கலத்துக்கு எழுந்தருள வேண்டுமென்று முதிய செழியர் சொல்லியனுப்பியிருக்கிறார். முதிய செழியர் தங்களிருவரையும் பார்த்து நீண்ட நாளாயிற்றாம். அதனால் அவசியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/19&oldid=489918" இலிருந்து மீள்விக்கப்பட்டது