பக்கம்:கபாடபுரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கபாடபுரம்


தங்களிருவர் வரவையும் எதிர்பார்க்கிறார். மற்ற சங்கப் புலவர்கள் ஐம்பத்தெழுபதின்மருக்கும் தூது சொல்லி அழைப்பனுப்பியிருக்கிறார் பெரியவர். அனைவருமே நகரணி மங்கல நன்னாளில் கபாடபுரத்துக்கு வந்து சங்கமிருந்து தமிழாராய வேண்டுமென்று மக்களெல்லாம் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்" - என்று பணிவாகத் தெரிவித்த முடிநாகனை நோக்கிப் புலவர்கள் இருவரும் புன்முறுவல் பூத்தனர். “கபாடபுரத்திலிருந்து அழைத்துச் செல்வதற்குத் தேர் வந்திருக்கிறதென்றவுடன் நம் சாரகுமாரனின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி பொலிகிறது பார்த்தீர்களா அவிநயனாரே?" என்று சிரித்தபடியே சாரகுமாரனைச் சுட்டிக் காட்டி அவிநயனாரிடம் கூறினார் சிகண்டியாசிரியர். அதைச் செவியுற்றபடியே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சாரகுமாரன் "அந்த மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் ஆசிரியர் பிரான்களாகிய தாங்களும் அடியேனுடன் கோநகரத்துக்கு வந்தருளப் போகிறீர்கள் என்பதுதான்சுவாமீ!" என்று சாதுரியமாக அவர்களுக்கு மறுமொழி கூறினான்.

கீழ்த்திசை வானில் நிலா எழுந்து நதிக்கரைச் சோலையைப் பால் முழுக்காட்டினாற்போல இரம்மியமாக்கியது. ஆசிரியர்களும், சாரகுமாரனும், இரவு உணவை மணலூர்ப் பொழில் மாளிகையிலேயே முடித்துக்கொண்டனர். முடிநாகனும் அங்கேயே உண்டான். உணவுக்குப் பின்னர் இளைய பாண்டியன் சாரகுமாரனும், புலவர் பெருமக்களும் புறப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப்பின் பாட்டனாரின் முத்துத் தேரையும் முதன்மையான வேகம் பொருந்திய தேர்ப்புரவிகளையும் பார்த்துச்சாரகுமாரனுக்குத் தேர் செலுத்திச்செல்லும் ஆசை மேலிட்டது. புலவர்களைத் தேரினுள் இருக்கைகளில் அமரச் செய்து முடிநாகனைத் தன்னருகே தேர்தட்டுச் சட்டத்தில் இருத்திக் கொண்டு நிலா ஒளி நிரம்பித் தெளிவாயிருந்த பெரும்பாண்டிய இராஜபாட்டையில் தேரைச் செலுத்தினான் சாரகுமாரன். குதிரைகள் தாவிப் பறந்தன. மறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/20&oldid=489919" இலிருந்து மீள்விக்கப்பட்டது