பக்கம்:கபாடபுரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

19


நாள் நகரணி மங்கல விழா இருந்ததனால், இரவையும் அகாலத்தையும் பொருட்படுத்தாமல், நிலா ஒளி பகல் போலக் காய்ந்து கொண்டிருந்த கபாடபுரப் பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாகவும் மூட்டை முடிப்புக்களுடனும், கரி, பரி, தேர்களுடனும் மக்கள் பயணம் செய்துகொண்டிருந்தனர். பொருநரும், பாணரும், கூத்தரும், விறலியரும் ஆகிய கலைஞர்கள் வழிப் பயனத்தின் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகப் பாடல்களையும் வரிக்கூத்துச் செய்யுள்களையும் இரைந்து பாடி இசைத்துக் கொண்டு சென்றனர். புலவர் பெருமக்கள் அங்கங்கே இடை வழியில் சிகண்டியாரும், அவிநயனாரும் தேரில் பயணம் செய்து விரைந்து கொண்டிருப்பதையும், இளைய பாண்டியர் சாரகுமாரர் அந்தத் தேரைச் செலுத்திச் செல்வதையும் கண்டு ஆரவாரமிட்டு வாழ்த்தொலி முழக்கினர். இரவிலும் கபாடபுரத்துக்குச் செல்லும் அந்த அரசவீதி திரு விழாக்கோலங் கொண்டிருந்தது. இருமருங்கும் பெரிய பெரிய ஆலமரங்கள் செறிந்ததும் - வழிப்போக்கர் தங்கிச் செல்லும் வழிப்போக்கர் மாடங்களும், அறக்கோட்டங்களும், நிறைந்துமான அந்தப் பெரும் பாண்டிய இராஜபாட்டை கபாடபுரத்தையும் அந்தக் கோநகரத்தைப் போலவே வடகிழக்கே - பாண்டிய நாட்டின் மற்றொரு கடல் வாணிக நகரமான கொற்கையையும் இணைத்தது. இடையே மணலூர், பூழி, முதலிய பேருர்கள் அமைந்திருந்தன. சாலையின் இருபுறமும் ஆலமரங்களுக்கப்பால் தோட்டங்களும், நெல் வயல்களுமாக வளம் பொங்கிய சூழ்நிலைகள் தோன்றின. மெல்லிய காற்று நிலா இரவின் தண்மையோடு வீசிக்கொண்டிருந்தது. சிகண்டியார் இளைய பாண்டியனுக்கு இசையும் கற்பித்து வந்தாராகையினால் அந்த நேரத்துக்குப் பாட ஏற்ற பண் ஒன்றைக் கூறி இளையபாண்டியனைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார்.

இளையபாண்டியனும் ஆசிரியருடைய வேண்டுகோளின் படி தன் அமுதக்குரலில் தேனிசை பொழிந்து கொண்டே தேரின் வேகத்தைக் குறைத்துப் பரிகளைச் சற்றே மெல்லச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/21&oldid=489920" இலிருந்து மீள்விக்கப்பட்டது