பக்கம்:கபாடபுரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கபாடபுரம்


செலுத்தினான். தக்கராகப் பண்ணில் சிகண்டியார் கற்பித்த பாடலொன்றினைப் பாடி முடித்தபின் கேட்பவர்களை உருக்கிச் சுழன்று துவளச்செய்யும் இரங்கற் பண்ணாகிய விளரியை இளைய பாண்டியன் தொடங்கியபோது சிகண்டியார் அது முடிகிற வரை தேரைச் சாலையோரமாக நிறுத்தி விடுமாறு சொல்லிவிட்டார். தேரை நிறுத்திவிட்டுச் செவிமடுத்து மகிழுமளவுக்கு ஒன்றரை நாழிகை நேரம் விளரியை இழைத்து இழைத்துப் பாடினான் சாரகுமாரன். நடுநடுவே சிகண்டியார் அவனுக்குச் சில திருத்தங்கள் கூறித் தாமே பாடிக்காட்டினார். சிகண்டியார் இசைப் புலமையின் நிறை குடமாயினும் முதுமை அவருடைய குரலைத் தளர்த்தியிருந்தது. சாரகுமாரனோ கனிந்த குரலில் இனிமைபிழியும் இரங்கற்பண்ணாகிய விளரியைப் பொழிந்து தன் ஆசிரியர்களையும், சாலைகளையும், சோலைகளையும், மரங்களையும், மண்ணையும், விண்ணையும் உருக்கினாற்போன்றதொரு பிரமையை உண்டாக்கினான்.

"குழந்தாய்! உன்னுடைய குரலிலும் நாவிலும் தெய்வம் குடிகொண்டிருக்கிறது. என்னுடைய இசை ஞானத்தை யெல்லாம் கொண்டு நீ பாடும் குரலுக்காகவும் முறைக்காகவுமே ஒரு புதிய மாபெரும் இசையிலக்கணத்தைப் படைக்கலாம் போலத் தோன்றுகிறது. உன் குரல் பாடி முடிப்பதற்கு உலகம் இதுவரை படைத்துள்ள இசை வரம்புகள் சிறியவையாகவே எனக்குத் தோன்றுகின்றன" என்று சாரகுமாரனை வியந்து வாழ்த்தினார் சிகண்டியார். அவிநயனாரும் பாராட்டினார். முடிநாகனோ மெய்மறந்து போனான்.

"சுவாமீ! தங்கள் வாழ்த்துக்கும் புகழுக்கும் தகுதியானவனாக இந்தச் சிறுவனை இறைவன் என்றும் வைத்திருக்க வேண்டும்" - என்று அவரைப் பணிந்து வணங்கினான் சாரகுமாரன். தேர் புறப்பட்டது. சிறிது தொலைவு சென்றதும் சாரகுமாரனின் மற்றோர் ஆசிரியராகிய அவிநயனார் அவனுடைய இயற்றமிழ்ப் புலமையை உறைத்துப் பார்க்க விரும்பிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/22&oldid=489921" இலிருந்து மீள்விக்கப்பட்டது