உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கபாடபுரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

21


வராய் ஒரு சோதனை வைத்தார். "சாரகுமாரா இப்போது உனக்கு நான் ஓர் ஈற்றடி கொடுக்கிறேன். தேர் இந்தச் சமயத்தில் சென்று கொண்டிருக்கும் இதே இடத்திலிருந்து இன்னும் கால் நாழிகைத் தொலைவை அடைவதற்குள் என்னுடைய ஈற்றடியை நான் சொல்லுகிற பொருள் அமையும் படி நீ தேரை நிறுத்திவிட்டுச் சிந்திக்காமல் தேரையும் செலுத்திக் கொண்டே சிந்தித்து முடிக்கவேண்டும்."

"ஈற்றடியைச் சொல்லியருள வேண்டும் சுவாமீ. தாங்கள் கற்பித்த யாப்பும் செய்யுட் கோப்பும் இந்தச் சோதனையில் அடியேனைக் காப்பாற்றி வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களை வணங்கி இந்த ஈற்றடியை ஏற்று முயல்வேன்” என்றான் சாரகுமாரன்.

உடனே அவிநயனார் தேர் ஒடும் ஒசையின் விரைவில் தம் குரல் காற்றில் போய்விடாதபடி நிறுத்தி நிதானமாக இரைந்து "காயும் நிலவுக் கனல்" - என்று முன் புறம் தேர்த்தட்டிலிருந்த சாரகுமாரனுக்குக் கேட்கும்படி கூறிவிட்டு, "தலைவி தலைவனது பிரிவை நினைந்துருகி நிலவையும் கடலையும், தென்றலையும் மாலை வேளையையும் எண்ணி அவை தன்னை வாட்டி வருத்துவதாகச் சொல்லுவது போல் உன்னுடைய வெண்பா நிறைய வேண்டு" மென்று பொருளும் பாட்டெல்லையும் வகுத்து விளக்கிச் சொன்னார். "மாணவனை அதிகமாகச் சோதிக்கிறீர்கள் அவிநயனாரே" என்று சிரித்தபடியே கூறினார் சிகண்டியார்.

"விளரிப்பண் பாடியதை விட இது ஒன்றும் பெரிய சோதனை அல்லவே?" என்று மறுமொழி கூறிச் சிகண்டியாரைப் பேச்சில் மடக்கினார் அவிநயனார். ஆசிரியர்கள் இருவரும் இப்படித் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, "சுவாமீ வெண்பா என் மனத்தில் உருவாகி விட்டது. கூறட்டுமா?" என்று முன்புறம் தேர்த்தட்டிலிருந்து சாரகுமாரன் வினாவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/23&oldid=489922" இலிருந்து மீள்விக்கப்பட்டது