பக்கம்:கபாடபுரம்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

கபாடபுரம்


"குழந்தாய்! கவனம். அவசரத்தில் சீர், தளை கெட்டுப் போய் விடப்போகிறது. நான்றாக நினைத்துப்பார்த்து எல்லாம் ஒழுங்காயிருப்பதாக நீயே மன நிறைவு அடைந்த பின்பு சொல். இன்னும் கால் நாழிகை தொலைவு வரவில்லையே? அதற்குள் உனக்கென்ன அவசரம்?"

"அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் பாட்டுக் கனிந்து விட்டது. சொல்லலாம்."

"எங்கே? சொல், பார்க்கலாம்."

"நீலக் குறிஞ்சி நெடுவரை நீழலிற்
சாலப் பலசொல்லி நீத்தனர் . வேலவர்
பாயும் திரையாழி தென்றலுடன் மாலையெலாம்
காயும் நிலவுக் கனல்"

என்று சாரகுமாரன் நிறுத்தி நிறுத்தி ஒவ்வோரடியாகக் கூறி முடித்ததும் வியப்படைந்த அவிநயனார், "வாழ்க! இறையருளும் கலைமகளருளும் உனக்கு நிறைவாகத் துணை நிற்கின்றன. வெண்பா மிக நன்றாக வந்திருக்கிறது. உன் பாட்டனார் கேட்டால் பெருமைப்படுவார். கபாடபுரத்தை யடைந்ததும் முதல் வேலையாக உன்பாட்டனார் வெண் தேர்ச்செழியரிடம் நீ இயற்றிய இந்த வெண்பாவைத்தான் சொல்லப்போகிறேன் நான்" என்றார்.

"ஐயோ! வேண்டவே வேண்டாம் சுவாமீ! பெரியவருக்கு உடனே கோபம் வந்துவிடும். இத்தனை சிறிய வயதில், அகப்பொருள் தொடர்புடைய காதற் பாடலைப் பாடி முடிக்குமாறு இந்தப் பசலைப் பிள்ளைக்கு நீங்கள் எப்படி இத்தகையதோர் ஈற்றடியைக் கொடுக்கலாமென்று உங்களிடம் பாட்டனார் சொற் போருக்கே வந்துவிடுவார்" - என்று இளையபாண்டியனுக்காகப் பரிந்து முடிநாகன் கூறியதும் புலவர்கள் பாட்டனாரிடம் அவனுக்குள்ள பயத்தைக் கண்டு புன் முறுவல் பூத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/24&oldid=489923" இருந்து மீள்விக்கப்பட்டது