பக்கம்:கபாடபுரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கபாடபுரம்


இன்னாரென்று இனங் காண்பித்துக் கொள்ளாது அமைதியாக நுழைந்து இளையபாண்டியரைக் கண்டதும் மெளனமாக விலகி வழி விட்டது. கூட்டத்தினிடையே பொன்னிறப் பூமாலை ஒன்று சரிந்து தளர்ந்து விழுந்து கிடப்பதுபோல் இளம்பாண் மகள் ஒருத்தி விழுந்திருந்தாள். அவளருகே யாழ் ஒன்றும் விழுந்து கிடந்தது. மயங்கி விழுந்தவளைக் கண்ட இளையபாண்டியரின் விழிகள் 'இவள் யார்? ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாள்? - என்று வினாவுவது போன்ற பாவனையில் சுற்றி நின்றவர்களைத் துழாவின. புதிதாக வந்த அவனைக் கண்டதும் அவர்கள் அழுகையும் கண்ணிரும் நின்றன.

"எல்லாரோடும் உடன் நடந்து வந்துகொண்டிருந்தவள் திடீரென்று நடைதளர்ந்து மயங்கி விழுந்துவிட்டாள்" - என்று ஒரே சமயத்தில் பல குரல்கள் இளைய பாண்டியரின் செவியில் ஒலித்தன.

துயரமும், சோர்வும், பயமும் கொண்ட அந்தக் கூட்டத்தில் மலர்ந்த முகமும், புன் சிரிப்பும், ஒளிர இளையபாண்டியர் புகுந்தது இருளில் மின்னல் தோன்றிப் பொலிவது போலிருந்தது. இளையபாண்டியரைப் பின் தொடர்ந்து வந்திருந்த முடிநாகன் குறிப்பறிந்து செய்ய வேண்டியதை உணர்த்தவனாகச் சாலை யோரமாய் மரக் கூட்டத்திற்கு அப்பாலிருந்த நெற் கழனிகளுக்கு நீர்பாயும் வாய்க்காலைத் தேடி ஓடினான். பக்கத்திலிருந்து மரங்களில் இலைகள் பெரிதாயிருந்த மரமொன்றிலிருந்து நாலைந்து இலை மடல்களை இணைத்துப் பேழைபோற் செய்து நீர் முகந்து கொண்டு விரைந்தான் அவன். தண்ணென்று குளிர்ந்த வாய்க்கால் நீரை ஒரு கை அள்ளி அவள் முகத்தில் தெளித்தபோது - தண்ணீரின் குணத்தினாலோ அதைத் தெளித்த சாரகுமாரனின் மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/26&oldid=489925" இலிருந்து மீள்விக்கப்பட்டது