பக்கம்:கபாடபுரம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27


நாணம் நாவை அடைக்கும் காதல் மழலையாக ஒலித்தது அவள் குரல் : "கண்ணுக்கினியாள். செவிக்கினிதாக ஒலித்த இந்த மறுமொழி சாரகுமாரனின் நெஞ்சைத் தொட்டது. பெண்ணின் குரலுக்கு வசீகரமான அழகு வருகிற இடம் நாவில் சொல் பிறக்கும் நிலையும் - அதே கனத்தில் அந்தச் சொல்லை உடைக்கும் நாணமுமாகத் தடுமாறி வெளி வருகிற குதலைச் சொல்தான். பெண்ணின் உணர்ச்சிகளில் மிக நளினமான உணர்ச்சி இந்தக் குதலைச் சொல்தான். பெண்னோடு உடன் பிறந்த அந்தரங்க சங்கீதமே இந்தக் குதலை மொழி தான் என்று சொல்ல வேண்டும்.

மலரக் காத்திருந்து மலர்ந்ததும் ′கம்′மென்று மணம் விரியும் நறுமண மிகுந்த பூவைப்போல ஒவ்வொரு பெண்ணிடமும் அவள் மலரும்போது நாணமும் சொல்லுமாகத் தடுமாறிப் பிரியும் இந்த அழகிய மொழி பிறக்கிறது. இன்னொரு முறை அவள் குரலிலேயே அந்தப் பெயரைக் கேட்க வேண்டும் போல ஆசையாயிருந்தது சாரகுமாரனுக்கு. உலகத்தின் முதற் பண்ணைப் பெண்ணின் குதலையிலிருந்து தான் மனிதன் கண்டு பிடித்திருக்க வேண்டு மென்று அப்போது தோன்றியது அவனுக்கு. அவள் பேசினாளா அல்லது தளர்ச்சியினால் அவளிடமிருந்து கீழே பிரிந்து கிடந்த யாழ் அவளுக்காகப் பேசியதா என்று பிரமையடையும்படி இன்னும் அவன் செவிகளிலேயே ரிங்கார மிட்டுக் கொண்டிருந்தது அந்த ஒரு பெயர்.

"என்ன இருந்தாலும் நீ செய்தது தவறுதான் பெண்ணே முதுமையினால் தளர்ந்த பெற்றோர்களை வழி நடையாளர்களோடு பின்தங்க விட்டுவிட்டு நீ மட்டும் இப்படித் தனியே வரலாமா?"

சாரகுமாரனின் இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறாமல் கீழே கிடந்த தன் யாழைப் பார்த்தபடி மெளனமாக வெட்கம் சிவக்கும் முகம் அழகு பொலிய நின்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/29&oldid=489928" இலிருந்து மீள்விக்கப்பட்டது