பக்கம்:கபாடபுரம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

29


கலைக்கருவிகளும் கீழே தவறி விழும்படி அத்தனை வேகமாக இதுபோல் யாரையும் தேடி ஓடக்கூடாது. இதோ இந்த அருமையான யாழை இவள் ஒருகணம் கீழே மண்ணில் தவற விட்டிருப்பதைக் கூட இப்போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை." - என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து நல்லவேளையாக எதுவும் பழுதுபடாமலிருந்த அந்த யாழைக் கையிலெடுத்து அதில் மண் படிந்திருந்த இடங்களை மேலாடையால் தூய்மை செய்தபின்,

"எந்த நிலையிலும் இதைக் கீழே தவற விட்டு விடாதே பெண்ணே கவிஞனின் எழுத்தாணியும், பாணனின் யாழும் . வாழ்க்கையின் சோர்வுகளில் கூட அவனிடமிருந்து கீழே நழுவவே கூடாது. வாழ்க்கையின் சோர்வுகள் கலையை ஆள்பவனைக் கீழே தள்ளலாம். ஆனால் அவனுடைய கலையையே கீழே தள்ளிவிடக் கூடாது" ... என்று புன்முறுவல் செய்தவாறு கூறி அவளிடம் யாழைக் கொடுத்தான் சாரகுமாரன்.

யாழை வாங்கிக் கொள்ளும்போது அவள் கைகளையும், விரல்களையும் பார்த்த சாரகுமாரனின் மகிழ்ச்சி மேலும் அதிகமாகியது. தாமரை இதழ்களை நீட்டிச் சுருட்டிப் பவழ நகங்கள் பதித்தாற் போன்ற அந்த நீண்ட நளின விரல்கள் யாழ் வாசிப்பதற்கென்றே படைக்கப் பெற்றவைபோல் தோன்றின. ஒருமுறை பார்த்தாலும் மறந்து விட முடியாத அத்தனை அழகிய விரல்கள் அவை. யாழை அவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அவள் நன்றியோடு சில வார்த்தைகள் தயங்கித் தயங்கிப் பேசினாள்.

"ஐயா! உங்களைப் போல் உதவி செய்யும் மனமும் கருணையும் நிறைந்தவர்கள் நிரம்பிக்கிடக்கிற இந்தப் பாண்டி நன்னாட்டின் வழிகளில் கலைஞர்கள் எந்த இடத்தில் சோர்ந்து விழுந்தாலும் நிச்சயமாக அவர்களுக்குக் கவலை இருக்க முடியாது. அவர்களுடைய யாழ் கீழே விழும்போதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/31&oldid=489930" இலிருந்து மீள்விக்கப்பட்டது