பக்கம்:கபாடபுரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

31


"நல்லது போய் வா! உன் பெயர் என்றும் என் நினைவிலிருக்கும் பெண்ணே இவ்வளவு அழகிய சொற்களை இணைத்துச் சூட்டப்பட்ட ஒரு பெயரை நான் இது வரை கேட்டதே யில்லை" - என்று அவளுக்கு விடை கொடுத்த சாரகுமாரன் அவள் நடை பின்னித் தளர்வதைக் கண்டதும் தன் முடிவை மாற்றிக் கொண்டு, "பெண்ணே உன்னால் இந்த நிலையில் நடக்க முடியாதென்று அல்லவா தோன்றுகிறது. நீ சம்மதித்தால் உனக்கு இன்னும் ஒரு சிறிய உதவியையும் இப்போது செய்யச் சித்தமாயிருக்கிறேன் நான். எங்களுடைய தேரில் நீயும் ஏளிக்கொள்வாயானால் ஒரு தளர்ச்சியுமின்றி இன்னும் சிறிது நேரத்தில் கபாடபுரத்தை அடைந்து விடலாம். இளைய பாண்டியரைப் பாக்க வேண்டு மென்ற உன் விருப்பமும் நிறைவேறிவிடும். உரிய நேரத்தில் உன்னைக் கபாடபுரத்தின் முதற்கோட்டை வாயிலில் இறக்கிவிட்டு விடுகிறேன்" - என்று கனிவாக வேண்டினான்.

இந்த வேண்டுகோளைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் தயங்கினாள். முன்னாள் கூட்டமாக விரைந்து கொண்டிருக்கும் தன்னுடன் வந்த மற்றப் பாணர்களையும் - இப்பால் நின்று தன்னைக் தேருக்கு அழைக்கும் சாரகுமாரனையும் மாறி மாறிப் பார்த்து ஒரு முடிவுக்கும் வர இயலாமல் அவள் தடுமாறுவது போல் தோன்றியது. சிறிது நேரச் சிந்தனைக்குப் பின், "எனக்குச் சம்மதமானாலும் உங்களுக்கு அந்தச் சிரமத்தைத் தரலாமா என்றுதான் நான் தயங்குகிறேன் ஐயா" - என்றாள் அவள்.

"இதில் சிரமம் ஒன்றுமில்லை பெண்ணே! துன்பப் படுகிறவர்களுக்கு உதவுவதைக் கருணையென்றும் மென்மையென்றும் கவிகள் போற்றும்போது அதை ஒரு சிரமமாக மட்டும் நான் நினைக்க முடியுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/33&oldid=489932" இலிருந்து மீள்விக்கப்பட்டது