பக்கம்:கபாடபுரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கபாடபுரம்


"நல்லது! உங்கள் பெருந்தன்மைக் குணத்தை வியக்கிறேன். இளையபாண்டியர் கோ நகருக்கு வருவதற்குள் நாம் அங்கே போய் விடலாமல்லவா?" - என்று அவள் நாணமும் புன்னகையுமாக அவன் முகத்தை ஏறிட்டுப் பாராமல் பூமியைப் பார்த்துக் கொண்டே வினாவியபோது அவளுள்ளே நிறைந்திருக்கும் ஆவல் சாரகுமாரனுக்குப் புரிந்தது.

"பெண்ணே உனக்கு நான் உறுதியே கூறமுடியும். எங்களுடைய இந்தத் தேர் கபாடபுரத்தின் கோட்டை வாயிலில் நுழைவதற்கு முன் இளையபாண்டியர் அங்கு வந்திருப்பதற்கு வழியே இல்லை. என்னை நீ நம்புவதோடு இப்போதே இந்தக்கணமே இளையபாண்டியரைப் பார்த்ததாகவ வைத்துக் கொள்ளலாம்."

இந்த உறுதி மொழியைக் கேட்டு அவள் அவனுடன் நடந்தாள். முடிநாகன் முன்பே தேருக்குச் சென்று ஆயத்தமாக இருந்தான். தேரை அவன் செலுத்தவே சாரகுமாரனும் அந்தப் பெண்ணும் தேரின் பின்புறச் சட்டத்தில் அமர்ந்து கொண்டனர். முன்புறம் உறங்கித் தளர்ந்திருந்த புலவர் பெருமக்களுக்கு இடையூறின்றித் தாங்கள் பின்புறம் அமர்வது நல்லதென்று அங்கே தானும் அந்தப் பெண்ணும் இருக்க வசதி செய்து கொண்டான்சாரகுமாரன். வழியில் அவளிடம் பல செய்திகளைப் பேசினான் அவன். இசை நுணுக்கங்கள், செவ்வழி, பாலைப்பண், யாழ் நரம்புகள், திவவு என்னும் யாழ்க்கட்டு உறுப்பு எல்லாவற்றையும் பற்றி அவளிடம் நிறைய விவாதித்தான்.

"ஏதேது? வணிகராகிய உங்களுக்குக் கூட இவ்வளவு இசைநுணுக்கங்கள் தெரிந்திருக்கின்றனவே?" என்று அவள் தன் குதலைச் சொற்களில் தேனிழைத்து அவனை வியந்து பேசிக் கொண்டிருந்தபோதே தேர் கபாடபுரத்தை நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/34&oldid=489933" இலிருந்து மீள்விக்கப்பட்டது