பக்கம்:கபாடபுரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கபாடபுரம்


சுவட்டோடு, அவனிடம் நிறையப் பேச வேண்டு மென்கிற ஆவலோடு இருந்த தாயையும் ஏமாறச் செய்து சாரகுமாரன் பெரிய பாண்டியரிடம் செல்ல வேண்டியதாயிற்று. "குழந்தை வந்ததும் இங்கே அழைத்து வந்துவிடுங்கள்" என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டுக் காத்திருந்தார் முதிய செழியர்.

அநாகுலன், திலோத்தமை, பெரிய பாண்டியர் எல்லாரையும் பார்த்து நலமறிந்த சுவட்டோடு உறங்கச் சென்று விட்டார்கள் அவிநயனாரும் சிகண்டியாரும். சாரகுமாரன் பாட்டனாரை வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு உறங்கப் போகலாமென்று நினைத்திருந்தான். பாட்டனாரோ அவனிடம் - அவனுடைய குருகுலவாசத்தைப் பரிசோதனை செய்து பரீட்சை வைப்பதுபோன்ற கேள்விகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கிவிட்டார். சந்ததிகளைப் பற்றிக் கிழவர்களுக்கே இயல்பாக முதுமையில் ஏற்படும் கவலையும் அக்கறையும் பாசமும் அந்த முதியவரைப்பற்றியிருந்தன. பேரப்பிள்ளையை நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்தவர் கேட்க வேண்டிய, கேள்விகளையெல்லாம் கேட்டுப் பரிசோதித்து விட்டார்.

"குழந்தாய்! தேரில் நீ வருகிறபோது வழியில் ஏதாவது விசேஷமுண்டா? இடை நிலத்து ஊர்கள் எல்லாம் செழிப்பாயிருக்கின்றனவா? பயிர் பச்சைகள் எல்லாம் வளமாகத் தெரிகின்றனவா? அரச குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைக்கு இவற்றில் எல்லாம் பொதுவாக ஒரு கவனம் வேண்டும். அரச குடும்பத்தைச் சேர்ந்தவனின் கவனத்துக்கும் கருணைக்கும் எல்லை மிகமிகப் பெரியது. பொதுவானது. பரவலானது! அந்த ஞாபகத்தோடு உலகைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/36&oldid=489935" இலிருந்து மீள்விக்கப்பட்டது