பக்கம்:கபாடபுரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கபாடபுரம்


விழிப்புத் தேவை. அரச குடும்பத்துப் பிள்ளைகளுக்கோ அதிகமான விழிப்பும் முன்னெச்சரிக்கையும் வேண்டும். எந்தப் பெண்ணும் ஒர் அரச குமாரனிடம் மயங்குவதற்குச் சாத்தியம் உண்டு. அரசகுமாரனோ யாரிடமும் மயங்காத தயங்காத கடமை வீரனாயிருக்க வேண்டும்."

தாத்தாவிடம் அந்த நிகழ்ச்சியைத் தான் சொல்லியிருக்கக் கூடாதென்று அப்போதுதான் இளைய பாண்டியன் உணர்ந்தான். அவரோ விடாமல் அதைப் பற்றியே அப்புறம் அவனைத் துளைத்தெடுக்கத் தொடங்கிவிட்டார்.

"அந்த இளம் பெண் யார் என்று கேட்டறிந்தாயா? அவள் எங்கிருந்து வந்தாளாம்? யாராம்? எந்த ஊராம் ? என்ன பெயராம்?"

"அவள் கையில் யாழுடன் வந்ததிலிருந்து பாண்குடியைச் சேர்ந்தவளென்னு தோன்றியது தாத்தா. அவள் பெயர் 'கண்ணுக்கினியாள்' என்று கூறினாள். மிகவும் அழகிய பெயரென்று நான்கூடப் பாராட்டினேன்."

“பாராட்டுவதற்கு அதில் அப்படி என்ன இருக்கிறது குழந்தாய்? எந்தப் பெண் பிள்ளைக்கு அந்தப் பெயரை வைத்தாலும்தான் பொருத்தமாயிருக்கும். உனக்கு நான் பெயர் சூட்டியதை விடவா அது அழகு?"

"இல்லை தாத்தா! அவள் உண்மையிலேயே அந்தப் பெயருக்காகவே பிறந்து வந்தவள் போலத் தோன்றினாள்."

"பார்த்தாயா? பார்த்தாயா? என்னிடமே அவள் புகழைப் பாடத் தொடங்கிவிட்டாயே? பெயரில் அழகைக் கண்டு மயங்கிவிடாதே. அதிர்ஷ்டவசமாக நமது மொழியில் உள்ள சொற்கள் எல்லாமே பொருத்தமாக இணையும்போது அழகாகத்தான் இருக்கின்றன. பதங்கள் இணையும்போது இணைக்கிறவனின் திறனால் அவற்றுக்கும் உயிர்-பொலிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/38&oldid=489937" இலிருந்து மீள்விக்கப்பட்டது