பக்கம்:கபாடபுரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

37


கவர்ச்சி - வனப்பு எல்லாம் வந்து சேரும். அந்தப் பெருமையை மொழிக்குக் கொடு அப்பா வெறும் பெண்ணுக்கு மனம் தடுமாறாதே. சொல்லின் பிரதிபிம்பம்தான் பொருள். சொல்லை மறந்து பொருளுக்காகப் பெருமைப் படுவது கூடாது."

தாத்தா அவனை வகையாகப் பிடித்துக் கொண்டார். வேண்டிய அறிவுரையையும் வழங்கத் தொடங்கிவிட்டார். 'சொல்லின் பிரதிபிம்பம்தான் பொருள். சொல்லை மறந்து பொருளுக்காகப் பெருமைப் படாதே' - என்ற தாத்தாவின் வாதம் பிழையானதென்றும் அதைப் பொருத்தமான தர்க்க நியாய மேற்கோள்களுடன் மறுக்க முடியும் என்றும் அப்போது அவனுக்குத் தோன்றினாலும் அதைப் பொறுத்துக் கொண்டான். பெரியவரை எதிர்த்து வாதிடத் துணியவில்லை அவன்.

மறுநாள் நகரணி மங்கலத்தைக் கொண்டாடு முகத்தால் கூடிய அரசவையில் பாண்டிய நாட்டுப் பெரும் புலவர்களும், பாணரும், பொருணரும், விரலியரும், யாழ் வல்லோரும், குழல் வல்லோரும், முழவு வல்லோரும் பாண்டிய மன்னரின் பெருமையையும், கோ நகராகிய கபாடபுரத்தின் பெருமையையும் புகழ்ந்து பாடியும், இசைத்தும், அவிநயமாடியும், பரிசில் பெற்றுச் சென்றனர்.

அவையில் பாட்டனார் வெண்தேர்ச்செழியருக்கு அருகே கொலுவமர்ந்திருந்த இளையபாண்டியன் அரங்கில் குழுமியிருந்த கூட்டத்தினரை உற்றுக் கவனித்தபோது முதிய பெற்றோர்களோடு கையில் யாழுடன் அந்தப் பெண் கண்ணுக்கினியாளும் காணப்பட்டாள். தான் அவளை நோக்கிய அதே வேளையில் அவள் தன்னுடைய பெற்றோரிடம் தன்னைச் சுட்டிக் காண்பித்து ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதையும் அவன் கவனிக்கத் தவறவில்லை.

அரியணையில் கொலுவிருந்த தந்தையார் அநாகுல பாண்டியரையும், தாய் திலோத்தமையையும் புகழ்ந்து பாடிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/39&oldid=489938" இலிருந்து மீள்விக்கப்பட்டது