பக்கம்:கபாடபுரம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

39


கெட்டுப் போகிறார்கள். தெரியுமா?" என்று முதிய பாண்டியர் அந்தப் புலவரை வாய் திறந்து பேசியே சாடிவிட்டார். புலவர் கூனிக் குறுகிப்போய் அப்படியே அமர்ந்து விட்டார்.

நகரணி மங்கல நாளன்று மாலையில் நகருக்குச் சிறிது தொலைவிலிருந்த மாபெரும் தோட்டத்தில் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர்களுடனும் மிகப் பெரிய நுழை வாயில்களுடனும் அமைக்கப் பட்டிருந்த தேர்க் கோட்டத்துக்குப் பாட்டனாருடனே சென்றிருந்தான் சாரகுமாரன்.

அன்றிரவு அந்தத் தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் நிலவில் உலா வந்து திரும்புவது வழக்கமான விழா மரபாக இருந்தது. முதல் தேரில் அநாகுல பாண்டியனும் அவனுடைய பட்டத்தரசியும், அடுத்த தேரில் முதியவர் வெண்தேர்ச் செழியரும், அதற்கடுத்த தேரில் இளைய பாண்டியன் சாரகுமாரனும், ஏனைய தேர்களில் அரண்மனை அதிகாரிகளும், அமைச்சர்களும், புலவர் பெருமக்களுமாக உலா வருவது வழக்கம்.

கடல் கொண்ட பழம் பாண்டி நாட்டிற்குப் பிறகு தரைப் பகுதி அதிகமுள்ள வடதிசை நோக்கிப் பாண்டியர்கோநகரம் நகர நகர நீரில் ஒடும் மரக்கலங்களைக் காட்டிலும் தரையில் ஒடும் தேர்ப்படைகளை அதிகமாக்கிப் பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தில் பல்லாயிரம் யவனத் தச்சர்களை வரவழைத்துப் பணிக்கமர்த்தி நிருதர் நாட்டுக் காடுகளிலுள்ள வைரம் பாய்ந்த மரங்களைக் கலங்கள் மூலமாகக் கொணர்ந்து இந்தத் தேர்களைச் சமைத்திருந்தார் வெண்தேர்ச் செழியர். நகரணி மங்கல நாளன்று நடைபெறும் இந்தத் தேர் உலாவைப் பார்ப்பதற்காகப் பாண்டி நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுவதுண்டு. கோட்டையைச் சுற்றியிருக்கும் நான்கு பெரும் இராச பாட்டைகளிலும் இந்தத் தேர்கள் வரும்போது எள் விழ இடமின்றி மக்கள் திரண்டிருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/41&oldid=489940" இலிருந்து மீள்விக்கப்பட்டது