பக்கம்:கபாடபுரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கபாடபுரம்


நல்லவேளையாக அன்று தேருலாவின் போதும் உடனிருந்த பேரப் பிள்ளையாண்டானைத் தம்முடைய அதிக அன்பினாலே பயமுறுத்தாமல் தம்முடைய தனித்தேருக்குப் போய்விட்டார் பாட்டனார். ஆசிரியர் பிரான்களாகிய அவிநயனாரும், சிகண்டியரும் கூடத் தங்களுக்கென்று அலங்கரிக்கப் பட்டிருந்த தனித்தனித் தேர்களுக்குப் போய்விட்டார்கள்.

இளையபாண்டியருடைய தேரை முடிநாகன் செலுத்தி வந்தான். நிலவொளியில் தேர்களில் பதிக்கப் பெற்றிருந்த முத்துக்கள் அற்புதமாய் மின்னி நகைத்தன. தேர் புறப்படுமுன் முடிநாகன் இளையபாண்டியரிடம் ஒரு செய்தி கூறினான். அன்று பகலில் பாட்டனார் முடிநாகனைத் தனியே அழைத்து "இளையபாண்டியன் மணலூரிலிருந்து தேரில் இங்கு புறப்பட்டு வரும்போது ஏதோ ஒரு நிகழ்ச்சி நடுவழியில் நடந்ததாமே? யாரோ பாண்மகள் ஒருத்தி மயங்கி விழுந்திருந்தாளாம். உடனே இவன் கருணை மிகுந்து ஓடிப்போய் அவளுக்கு மயக்கம் தெளிவித்தானாமே? அது என்ன கூத்து?" - என்று வினவினராம்.

"அது ஒன்றுமில்லை! கூடியிருந்தவர்களின் அழுகை ஒலி கேட்டு வெறும் இரக்கத்தினால் மட்டும் வலிந்து சென்று உதவி செய்தார். அந்தப் பெண் நடக்க முடியாமல் சிரமப்பட்டதனால் தேரில் அழைத்து வந்து நகர் எல்லையில் இறக்கிவிட்டார். இதில் குறிப்பிடத் தகுந்த விதத்தில் ஒன்றுமில்லை. இன்னும் சொல்லப் போனால், அந்தப் பெண்ணிடமோ கூட்டத்தினரிடமோ தான் அரச குமாரர் என்பதைக்கூட இளையபாண்டியர். காண்பித்துக் கொள்ளவில்லை. யாரோ முத்து வணிகன் என்று பொய் சொல்லித் தப்பித்துக்கொண்டார்" என்று அவர் மனம் சிறிதும் ஐயுறாதவாறு தான் அவருக்கு மறுமொழி கூறிவிட்டதாகத் தெரிவித்தான் முடிநாகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/42&oldid=489941" இலிருந்து மீள்விக்கப்பட்டது