பக்கம்:கபாடபுரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கபாடபுரம்


இலக்கிய இலக்கணப் பயிற்சியைக் கேள்விப்பட்டுக் கூடியவர்கள் சிலர். உருண்டு திரண்ட அவருடைய புஜங்கள் மல்யுத்த வீரர்களுக்கே உரிய செழிப்பு அமையப் பெற்றவை எனக் கேள்விப்பட்டதால் மல்யுத்தத்தில் ஆசைகொண்ட காளையர்களெல்லாம் அந்தப் பரந்த பொன் மார்பையும் எடுப்பான தடந்தோள்களையும் காணக் கூடியிருந்தனர்.

அப்படிக் கூடியிருந்த பல்லாயிரவரின் ஆவலையும் நிறைத்துக்கொண்டு நுழைவாயிலில் தென்பட்டு வெளிவந்த இளையபாண்டியரின் தேர் கோலாகலமான பேராரவாரத்தோடு வரவேற்கப்பட்டது. கூட்டத்தினர் சாரகுமாரனைக் கண்கள் நிறைய ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டி ஒருவரை ஒருவர் இடித்து நெருக்கிக் கொண்டு முந்தினர். இளையபாண்டியரின் தேருக்குப் பின்னாலும் வேறுபல தேர்கள் அடுத்தடுத்து வரவேண்டியிருந்ததனால் இளைய பாண்டியரின் தேர் ஒரு கணம்கூட நிற்காது, பின்னால் வருகிற தேர்களுக்கு வழி அமைவதற்காகவாவது விரைய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

ஆனால் யாருமே எதிர்பாராத பேரதிசயமாக இளைய பாண்டியரின் தேர் நுழைவாயிலருகே ஒரிரு கணங்களுக்கும் மேலாக நின்றது. தானாக நிற்கவில்லை. கூட்டத்தில் எதையோ பார்த்துவிட்டு இளைய பாண்டியரே முடிநாகனின் தோளைத் தொட்டு அவனுக்கு உணர்த்தித் தேரை நிறுத்தச் செய்திருந்ததையும் முன்வரிசையில் நின்ற சிலர் கண்டிருந்தனர்.

தேர் நிறுத்தப்பட்டதோடு போகாமல் யாரும் எதிர்பாராத வண்ணம் அழகுக்கெல்லாம் இலட்சிய எல்லையான காமதேவனே கீழிறங்கி வருவதுபோல் இளையபாண்டியர் சாரகுமாரரே தேரிலிருந்து கீழிறங்கிக் கூட்டத்தை நோக்கி ஓரிலக்கைக் குறிவைத்து விரைந்தார். ஏன்? ஏன்? அங்கே என்ன? அங்கே என்ன? எதற்காக இளையபாண்டியர் கீழிறங்கிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/44&oldid=489943" இலிருந்து மீள்விக்கப்பட்டது