பக்கம்:கபாடபுரம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49


மேலோ படையெடுத்து வருவதாயிருந்தால் முதலில் இந்தக் கடற்கொலைஞர்களின் தீவுகளைக் கடந்தே வரவேண்டும். பிறவிக் கலகக்காரர்களும், கொள்ளைக் கூட்டத்தினரும் ஆகிய கடற் குறும்பர்கள் தங்களைக் கடந்து யார் எங்கு போக முயன்றாலும் வழிமறித்துத் தொல்லை தருவது இயல்பாக இருக்கும்.

இந்தக் காரணத்தை அந்தரங்கமாகச் சிந்தித்துப் பார்த்த பின்பே அவர்களை அடக்குவதுபோல அடக்கிவிட்டுக் கபாடபுரத்துக்கோ மற்ற நகரங்களுக்கோ விழாவணி நாட்களில் அவர்கள் வருவதையோ போவதையோ தடுத்து ஒடுக்காமல் விட்டிருந்தார் பெரிய பாண்டியர். அநாகுலனுக்கும் தந்தையாரின் இந்த இராசதந்திர ஏற்பாடு பிடித்திருந்தது. இந்த ஏற்பாட்டிற்குப் பின்னரும் கடற் கொலைஞர்களின் சிறு சிறு தொல்லைகள் அங்கங்கே எழுவதுண்டாயினும் அவற்றைச் சாதுரியமாகவும், பெரும் பகை மூளாத வகையிலும் பாண்டி நாட்டார் எதிர்கொண்டு ஒடுக்கி வந்தனர்.

இப்படிப்பட்ட கடற் கொலைஞர்கள் சிலரை நகரணி விழாவன்று இரவில் தேருலா முடிந்ததும் சாரகுமாரனும், முடிநாகனும் சந்திக்க நேர்ந்தது. தேருலா முடிந்ததும் பழையபடி தேர்களைத் தேர்க்கோட்டத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டுப் பட்டினப் பிரவேசத்துக்காகப் புனைந்து கொண்ட அலங்காரக் கோலங்களையும் களைந்துவிட்டு உறக்கம் வராத காரணத்தினால் பரிகளில் முடிநாகனும் சாரகுமாரனும், கோட்டைக்கு வெளியே புறப்பட்டிருந்தார்கள்.

கடற்கரைப் புன்னைத் தோட்டத்திற்குச் சற்றே தள்ளி வடபுறமுள்ள சிறு சிறு குன்றுகளில், கபாடபுரத்தின் புகழ் பெற்ற இரத்தினச் சுரங்கங்கள் இருந்தன. இந்த இரத்தினாகரங்கள் அமைந்திருந்த குன்றுப் பகுதி முழுதும் முகவசீகரம் - எனப்படும் ஒருவகை விசேடமான எலுமிச்சை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பொன்னிறத்திற்குத் தளதளவென்று பருமன் பருமனான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/51&oldid=489950" இலிருந்து மீள்விக்கப்பட்டது