பக்கம்:கபாடபுரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5. தென்பழந்தீவுக் கடற்கொலைஞர்

நகரணி மங்கலத்தில் பல்வேறு விதமான ஆரவார நிகழ்ச்சிகளில் எல்லாம் ஒடியாடிக் களைத்த மக்கள் கூடாரங்களிலும் அறக்கோட்டங்களிலும் தெருத் திண்ணைகளிலும் மேடைகளிலுமாக முடங்கிவிட்டனர். சாமக் கோழி கூவுகிற நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. தொலைவிலே கடல் அலைகளின் ஒசை கரையோடு மோதும் நேரத்திலே பெரிதாகியும், மற்ற வேளைகளில் அடங்கியும் ஒலித்துக் கொண்டிருந்தது. பின்னிரவின் இதமான மென் காற்றுக் குளிரையும் மென்மையையும் இலேசாகப் பூசிக்கொண்டு உலா வந்தது. புட்பகத்திலிருந்தும், சாவகத்திலிருந்தும், தருவித்துப் பயிர் செய்து வளர்க்கப்பட்ட முகவர்ணம் முகவசீகரம் ஆகிய சாதி எலுமிச்சை மரங்களின் பூக்கள் கம்மென்று மணம் பரப்பி அந்த மகேந்திரமலைக் குன்றுகளைச் சொப்பன புரியாக்கிக் கொண்டிருந்தன.

அடி வயிற்றின் உள் மண்ணில் இரத்தினக் கற்களை விளைவிக்கும் அதே நிலவளம் மேலே பொற்கனிகளாக மின்னும் எலுமிச்சைப் பழங்களைக் கொத்துக் கொத்தாகக் கனிய வைத்திருந்தன. பூக்களின் வாசனையோடு பழங்களின் வாசனையும் விரவி வந்து அந்தப் பகுதியில் நடந்து செல்வதையே போதையுண்டாக்கும் ஒருகாரியமாகச் செய்து கொண்டிருந்தன. அங்கங்கே இரத்தினக் கற்களை எடுப்பதற்காக அகழ்ந்து தோண்டப் பட்டிருந்த பெருங்குழிகளில் நீர் தேங்கியிருந்து கண்ணாடியாய் மின்னியது. குழிகளின் அருகே குவிக்கப்பட்டிருந்த கற்களில் பட்டைத் தீட்டப்பட்டும், இரத்தினமாகியும், பெருமை பெறாது கழிக்கப்பட்ட சாதாரணக் கற்கள்கூடத் தங்களிடமிருந்த ஏதோ ஒரு நிறச் சிறப்பாலும் வடிவின் தனித் தன்மையாலும் நிலவொளியில் பிரகாசமாகத் தோன்றின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/53&oldid=489952" இலிருந்து மீள்விக்கப்பட்டது