பக்கம்:கபாடபுரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

53


"முழுமையாக அடங்கி விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது கடற் குறும்பர்களின் தொல்லைகள் ஏற்படத்தான் செய்கின்றன. கடற்பகுதிகளைத் தவிரக் கோ நகரிலும் குறும்பர்களின் இரகசியக் குழுக்கள் உண்டு. இந்தக் குழுக்களாலும் அவ்வப்போது கலகங்கள் வரும்."

"பாட்டனாரும், என் தந்தையும் மனம் வைத்தால் இவர்களை ஒரு நொடியில் அழித்தொழித்து விடலாம். ஏன் கோ நகருக்குள்ளேயே இவர்களைக் கலகக் குழுக்களாகவும், கொள்ளையிடுவோர்களாகவும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களென்று தெரியவில்லை..."

"காரணமில்லாமல் பெரியவர் எதையும் செய்ய மாட்டார். தவிரவும் இந்தக் குறும்பர்களைப் பூண்டோடு அழிப்பதென்பது அறவே சாத்தியமில்லாத காரியம். கோரைப் புற்களைப்போல் அழித்து விட்டோமென்று நாம் நினைக்கும் போதே தலையெடுத்து முளைக்கக் கூடியவர்கள் இவர்கள். இவர்களுடைய ஆணிவேரும், மூலமும் எங்கெங்கே ஊன்றியிருக்கின்றன என்பதைக் கண்டு தீர்க்க முடியாது. ஒருவன் அழிந்தால் பலர் எந்தெந்தத் தீவுகளிலிருந்தோ வருவார்கள். குமாரபாண்டியர் நினைப்பதுபோல் இவர்களை அவ்வளவு எளிதாக அழித் தொழித்து விட முடியாது..." என்றான் முடிநாகன்.

பேசிக்கொண்டே அருகருகே வந்ததனால் இருவரும் தத்தம் குதிரைகளை விரைந்து செலுத்துவதற்கு முயலவில்லை. கடற்கரைப் புன்னைத் தோட்டத்தை அவர்கள் சுற்றியபோது அங்கே தங்கியிருந்த கலைஞர்களின் கூடாரங்கள் அமைதியில் ஆழ்ந்து போயிருந்தன.

"அந்தப் பெண் கண்ணுக்கினியாளும் தன் பெற்றோர்களுடன் இங்கேதான் தங்கியிருப்பதாய்க் கூறினாள்" என்று ஏதோ நினைவுவந்தவனாக முடிநாகனிடம் கூறினான் சாரகுமாரன். புன்னைத் தோட்டத்துக்கு அப்பால் கடலோரத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/55&oldid=489954" இலிருந்து மீள்விக்கப்பட்டது