பக்கம்:கபாடபுரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

55


சாலையின் வாயிலில் அவர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இளைய பாண்டியரும், முடிநாகனும், இருளோடு இருளாக அவர்கள் முத்துப் பண்டசாலையின் வாயிற்கதவருகே ஒதுங்கி நிற்பதைப் பார்த்தும் பார்க்காதவர்களைப்போல் குதிரைகளை விரைவாகச் செலுத்திக் கொண்டு தெருவின் மறுகோடிக்கு வந்துவிட்டார்கள் என்றாலும் தெருக்கோடியில் ஒர் ஒரமாகச் சிறிதுநேரம் நின்றுகொண்டு அதைப்பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

"கோ நகரத்தின் இந்த மங்கலவிழா குறும்பர்களின் கொலையோ கொள்ளையோ இல்லாமல் நிறைவடைய முடியாதென்று சொல்லுகிற அளவுக்கு இது ஒரு வழக்கமாகிவிட்டது. புற வீதியின் இந்தப் பண்டசாலைகளினுள்ளே கொள்ளையிட இவர்களுக்கிருக்கும் வசதிகள்போல் வேறு வசதிகள் எங்கும் கிடைக்காது. கொள்ளையிட்ட பண்டங்களை அப்படியே பின்புறம் கொண்டுவந்து நிறுத்திய படகில் ஏற்றிக்கொண்டு கடலுக்குள் போய்விடலாம்" - என்று முடிநாகன் கூறியதைக் கேட்டு இளையபாண்டியருக்கு நெஞ்சம் கொதித்தது. முடிநாகன் அப்படிப் பேசியதும் அவனுடைய மனத்துக்குப் பிடிக்கவில்லை.

"இதென்ன முடிநாகா? இந்தச் சமயத்தில் கதை சொல்லுவதைப்போல் இந்த அரக்கர்களைப் பற்றி எனக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறாயே நீ? இவர்களைத் தடுக்க நாம் ஏதாவது செய்யவேண்டாமா? கண்ணால் கண்ட பின்பும் வாளா போவது நல்லதல்லவே? 'இவர்களுடைய கொலையோ, கொள்ளையோ இல்லாமல் விழாவே நிறைவடையாது' என்று நீ சொல்வதுபோல் நாம் நினைத்துக்கொண்டு பேசாமல் போய்விடமுடியுமா?"

"முடியாதென்றாலும் வேறென்ன செய்யலாம் குமார பாண்டியரே? குறும்பர்களுடைய உடலில் ஒடும் குறுதியின் ஒவ்வோரணுவிலும் கொலைவெறி கலந்திருக்கும். யார் இன்னார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/57&oldid=489972" இலிருந்து மீள்விக்கப்பட்டது