பக்கம்:கபாடபுரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

57


"அவற்றை எல்லாம் விவரம் சொல்லி விவாதிக்க இப்போது நேரமில்லை. புறநகரிலிருந்து கோட்டை மதில்மேல் ஏறுவதற்குள்ள வழிகளில் ஒன்று இந்த இடத்திலிருந்து மிக அருகிலுள்ள மதிற்கவர்ப் பகுதியில் உள்ளது. இப்படிப் புற நகரிலிருந்து மதில் மேல் ஏறுவதற்குள்ள வழிகளுக்குப் பெருங்கதவும் அந்தப் பெருங்கதவினூடே அமைந்த சிறிய திட்டவாயில் கதவும் அவற்றிற்குக் காவலாக ஆயுதந்தாங்கிய யவனக் காவல் வீரனும் உண்டு என்றாலும், நாம் எப்படியும் அவற்றைக் கடந்து மதில்மேல் ஏறியாக வேண்டும்."

"ஏறி என்ன சாதித்துவிட முடியும்?"

"முடிகிறதா இல்லையா என்றுதான் பாருங்களேன்?"

-இருவரும் தத்தம் குதிரைகளை விரைந்து செலுத்திச் சென்று அந்த இடத்தை அடைந்தனர். குதிரைகளிலிருந்து கீழிறங்கிப் படிவழிக்கு நுழைவாயிலான செப்புத்திட்டி வாயிற் கதவைத் தட்டியதும் பூதாகாரமான தோற்றத்தையுடைய கருங்குன்று போன்ற யவனக் காவல் வீரன் ஒருவன் வந்து கதவைத் திறந்தான். அவன் கையிலிருந்த தீப்பந்தத்தின் ஒளியின் இளைய பாண்டியர் தனது வலது கரத்தை முன் நீட்டி முத்திரை மோதிரத்தைக் காண்பித்தபோது பயபக்தியுடன் கைகூப்பி வணங்கி வழிவிட்டான் அவன். இளைய பாண்டியனும், முடிநாகனும் உள்ளே நுழைந்துகொண்டு திட்டிவாயிற் கதவை மறுபடியும் அடைத்துத் தாழிட்டு விடுமாறு அவனுக்குச் சைகை காட்டினர்.

அவன் வெளியே நின்ற குதிரைகளைச் சுட்டிக் காண்பித்துச் சைகையால் முடிநாகனிடம் ஏதோ வினவினான். 'குதிரைகள் அங்கு நின்றால் நின்றுவிட்டுப் போகட்டும் நீ கதவை அடைத்து உடனே உட்புறமாகத் தாழிடு' என்று முடிநாகன் கடுமையான முகக்குறிப்போடு விளக்கியவுடன் அவன் கனமான செப்புத்திட்டி வாயிற்கதவை உட்புறமாகத் தாழிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/59&oldid=489973" இலிருந்து மீள்விக்கப்பட்டது