பக்கம்:கபாடபுரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கபாடபுரம்


அவனை அங்கேயே நின்றுகொள்ளச் சொல்லியதுமில்லாமல், "நாங்கள் சொல்லுகிறவரை வேறு யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்கவேண்டாம்" - என்பதையும் உணர்த்தியபின் இருவரும் மதில் மீதேறி அங்கு வீரர்கள் நின்று போர் புரிவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு மேடை போன்ற நீண்ட தளத்தில் பதுங்கிப் பதுங்கி நடந்து கடற் குறும்பர்கள் கூட்டமாக நின்ற முத்துப் பண்டசாலை இருந்த பகுதிக்கு நேர் எதிரே மேலே இருந்த சுவர்ப் பகுதியை அடைந்தார்கள். தேர் எதிரே கீழே சாலையில் கொலைஞர்கள் நிற்பது மேலிருந்து நன்றாகத் தெரிந்தது.


6. கபாடத்தில் ஒரு களவு

மதில்மேல் அந்த இடத்திற்கு வந்த பின்புதான் முடிநாகன் செய்த சமயோசிதமான யோசனையின் சிறப்பு இளைய பாண்டியனுக்குப் புரிந்தது. முடிநாகனின் அனுபவ அறிவையும், கபாடபுரத்தின் கோட்டை மதிற்கவர்களில் எங்கெங்கு எந்தெந்த நுணுக்கங்கள் அமைந்திருக்கின்றன என்பது பற்றி அவனுக்கிருந்த ஞாபகத்தையும் பெரிதும் வியந்தான் சாரகுமாரன். நூற்றுக்கணக்கான கடற்குறும்பர்கள் எதிர்த்து நின்றாலும் தாக்கி அழிப்பதற்கு வேண்டிய வசதிகள் அப்போது அந்த இடத்தில் இருந்தன. பாட்டனார் அந்த மதிலையும், கோட்டையையும் அமைத்திருக்கும் விதத்தையும் நுணுக்கத்தையும் இளையபாண்டியனான சாரகுமாரன் வியந்துகொண்டிருக்கும்போதே கீழே குனிந்து அமர்ந்த முடிநாகன் அந்த இடத்தில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த மாபெரும் மரஉருளை ஒன்றைக்குறித்து, "இதோ பார்த்தீர்களா?" என்று வியப்பு நிறைந்த குரலில் கூறிக்கொண்டே சுட்டிக் காண்பித்தான். அந்த உருளையைப் பிணைத்திருந்த கயிறுகளைச் சுழற்றி முடிநாகன் வேகமாக அவற்றை இயக்கியபோது மிக விரைவாக அடுத்தடுத்துப் பல அற்புதங்கள் நிகழ்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/60&oldid=489976" இலிருந்து மீள்விக்கப்பட்டது