பக்கம்:கபாடபுரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

61


மாபெரும் கபாடங்களின் உச்சியில் பதித்துள்ள இரத்தினங்களின் மீது இருக்கிறது. அவுணர் வீதியிலுள்ள முரச மேடைக்கருகே இந்தக் கடற்குறும்பர்களுக்கு ஒற்றுச் சொல்லும் துரோகிகள் சிலரும் இருப்பதாக விவரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். அந்தக் கயவர்கள் யாரென்றும் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை..."

"முயன்றால் அதையும் கண்டு பிடித்து விடலாம்" என்று பாட்டனாருக்குப் பயந்துகொண்டே அவருடைய முகத்தைப் பார்க்கத் தயங்கியவனாக முடிநாகனிடம் சொல்வதுபோல் கூறினான் சாரகுமாரன். அதைக் கேட்ட பாட்டனாரிடமிருந்து அவனுக்கு நீண்டதோர் அறிவுரையே கிடைத்தது.

"கண்டு பிடிக்க முடியுமென்பதில் எனக்கும் ஐயமில்லை குழந்தாய்! ஆனால் இதில் சிறிது இராஜதந்திரமும் வேண்டியிருக்கிறது. இங்கிருக்கும் முரட்டு அவுணர்களில் பலர் புதிதாக இந்த நகரை அமைக்கும்போது நமது மாபெரும் கோட்டை மதில்களை உருவாக்கவும், அகழிகளை வெட்டவும், தேர்க்கோட்டம் சமைக்கவும் பணியாட்களாக வந்து பின் இங்கேயே தங்கிவிட்டவர்கள். அவர்கள் ஒன்றாக இணைந்து தங்கித் தங்கள் குடியிருப்பு வீதியையே இந்நகரின் புறத்தே அமைத்துக் கொண்டவர்கள். கோ நகருக்கு அப்பாலுள்ள கடற்பகுதிகளில் இருக்கும் தீவுகளில் அங்கங்கே கூட்டம் கூட்டமாக வாழும் இந்த இராட்சசக் குழுவினர்களை முழுமையாகப் பகைத்துக் கொள்வதில் கேடு உண்டு. பகை நெஞ்சமுள்ள இவர்கள் கெடுதல்களை இப்படியே வளர விடுவதிலும் கேடு உண்டு. பிற்காலத்தில் இந்த நாட்டை ஆளும் பொறுப்பு உன் கைக்கு வரும்போது இவற்றை எல்லாம் பற்றி நீ இன்னும் மிக அதிகமாகச் சிந்திக்க வேண்டியிருக்கும். பகைவர்களைவிடக் கெட்டவர்கள் நண்பர்களைப் போல் திரியும் பகைவர்கள் தான்." என்றார் அவனுடைய பாட்டனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/63&oldid=489981" இலிருந்து மீள்விக்கப்பட்டது