62
கபாடபுரம்
அப்போது அவருடைய நரைத்த மீசையும் சுருக்கம் விழுந்த முகமும் குழிந்த கண்களும் எத்தனைக்கெத்தனை முதுமையாகத் தளர்ந்து தோன்றினவோ அத்தனைக்கத்தனை அநுபவச்சாயலை நிறைத்துக் கொண்டனவாகவும் இளைய பாண்டியனின் கண்களுக்குத் தோன்றின. கபாடபுரம் என்னும் பொன்மயமான புதுக் கோ நகரை இத்தகையதொரு கம்பீரம் வாய்ந்த தலைநகரமாக உருவாக்கப் பாட்டனார் பட்ட சிரமங்களையும், துன்பங்களையும் பற்றிப் பிள்ளைப் பருவத்திலிருந்து கதை கதையாகக் கேள்விப்பட்டிருந்தான் அவன்.
ஒருகணம் அந்த முதியவர்தன் பாட்டனார் என்ற உறவை மறந்து, 'கபாடபுரத்தை எண்ணத்தில் உருவாக்கிப் பின் இயல்பிலும் உருவாக்கியவர் என்ற வியப்புடன் ஏறிட்டுப் பார்த்தபோது அந்தச் சாதனையைச் செய்தவரைப் பற்றிய ஞாபகம் மலைப்பூட்டுவதாயிருந்தது அவனுக்கு. அவரோ அவனிடம் மேலும் மேலும் உற்சாகமாகப் பல செய்திகளைக் கூறத் தொடங்கிவிட்டார்.
"இந்த நகரத்தை உருவாக்கிய புதிதில் எத்தனை இரவுகள் எத்தனை விதமான கோலங்களில் உறக்கமின்றி நகர் பரிசோதனைக்காக நான் அலைந்திருக்கிறேன் தெரியுமா? திருடர்களும், காமுகர்களும்தான் எந்தக்காலத்தும் ஆட்சியின் எதிரிகள். இவர்கள் விழித்திருக்கும் நேரமோ இரவு. இவர்களைத் திருத்தக் காவல் வீரர்களையும் நீதியையுமே நம்பி இராமல் நானே சுற்றி அலைய விரும்புவேன் குழந்தாய்!
"மாபெரும் துறைமுகத்தில் தென்கடல் வழி வரும் பல நாட்டுக் கப்பல்களும் நின்று போவதால் இங்கு நாலா தேசத்து மக்களும் திரிகின்றனர். அவர்களை அறிவதும், உணர்வதும் அரசனுக்குப் பயன்படும் என்பதை நீயும் ஒப்புக் கொள்வாய்! அவிநயனாரும், சிகண்டியாரும், உனக்கு நூலறிவைக் கற்பிக்கலாம். உலகியலை நீயே கற்றுத்தான் அறியவேண்டும். அநுபவம் மட்டும் தேடி அலைந்தே அடைய முடிந்தது. 'இரவில்