பக்கம்:கபாடபுரம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

5


பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறு புறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது?

சோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம் பட்டினத்தைப் போன்றதும் - அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலை நகரமான கபாடபுரத்தைப்பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாய மில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் பாண்டியர்கள் ஆண்டு அமைத்து வளர்ந்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்து விட்டது. இதன் பின்பே பாண்டியர்களின் தலை நகர் மதுரைக்கு மாறியது. கபாடபுரம் அழிந்த பின்னரும் சோழர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர். ஏனென்றால் கபாடபுர நகரம் கடல் கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும் பற்பல ஆண்டுகளுக்கும் பின்பு கடைச் சங்க காலத்திற்கும் கூடக் காவிரிப்பூம் பட்டினம் சோழ நாட்டுப் புலவர்கள் பாடும் இலக்கிய நகராக இருந்தது.

பாண்டியர்களின் பொன் மயமான-பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம் பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்திரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கிய மில்லை. தமிழரசர்களின் அழிந்த கோ நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோ நகராயிருந்து கட்ல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம் பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/7&oldid=489906" இருந்து மீள்விக்கப்பட்டது