பக்கம்:கபாடபுரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கபாடபுரம்


பொதுப்பேச்சாக்கியபோது இளைய பாண்டியனுக்கு அவன் மேல் கோபம் வந்தது. ஆனால் அந்தக் கோபத்தை வெளிப்படையாகக் காண்பித்துக்கொள்ள முடியவில்லை.

இளைய பாண்டியனுக்கும், முடிநாகனுக்கும் அருகே நின்ற முதியவர் ஒருவர், "உருகுவதற்காக ஆண்பிள்ளைகளையும் உருக்குலைப்பதற்காகப் பெண்களின் அழகையும் படைத்திருக்கிறான் கடவுள்" என்று எங்கோ பாராக்குப் பார்த்தபடியே சொல்லி விட்டு நகர்ந்தார். அவரை வாதுக்கழைத்துக் கோபமாக உரையாட எண்ணினான் சாரகுமாரன். ஆனால் அவரோ இதைச் சொல்லிவிட்டு அவசர அவசரமாகப் போய்விட்டார். மேலும் அரை நாழிகைப் போதுக்கு மேல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்தில் கழித்த பின்பே முடிநாகனும், இளையபாண்டியனும் அரண்மனைக்குத் திரும்பினர். வழியில் அந்தப் பெண்ணின் அழகை வியந்தபடியே பேசிவந்தான் இளையபாண்டியன். முடிநாகன் ஒன்றும் மறுத்துச் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் உறங்கச் செல்வதற்காக எந்தப் பள்ளிமாடத்துக்குப் போகவேண்டுமோ அந்தப் பள்ளிமாடத்தின் வாயிலில் கவலையோடு அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் பெரிய பாண்டியர் வெண்தேர்ச்செழியர்.


9. முதியவர் முன்னிலையில்

அந்த நேரத்தில் பெரிய பாண்டியரை அங்கே எதிர்பாராத காரணத்தால் முடிநாகனும், இளையபாண்டியனும் சிறிது திகைத்தனர். ஆனாலும் பெரியவர் அப்படிக் கவலைப்பட்டுக் கண் விழித்திருப்பதை முடிநாகன் வியக்கவில்லை. அவரெதிரில் இருவரும் அடக்க ஒடுக்கமாகச் சென்று நின்றார்கள். பெரியவர் இருவரையும் நன்றாக ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/78&oldid=490001" இலிருந்து மீள்விக்கப்பட்டது