பக்கம்:கபாடபுரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

கபாடபுரம்


தோன்றியது. விருப்பமானது, அறியும் திறனை மங்கச்செய்து விடுகிறது என்பதை இப்போது நன்றாக உணர்ந்தான் இளையபாண்டியன். கண்ணுக்கினியாளின் ஆடல் பாடல்களில் திளைத்த தனது விருப்பம் தனது அருகில் வந்து நின்ற முதியவரை உணரும் ஆற்றலை இழக்கச் செய்திருக்கவேண்டுமென்று இப்போது அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் மேலும் தலைகுனிந்தான்.

"அரசகுமாரர்கள் தெருவில் திரியும் பொதுமக்கள் போல் தங்கள் விருப்பு வெறுப்புக்களைத் தெரிவிப்பதும் பேசித் திரிவதும் விந்தைதான். 'எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம்' என்பதை அருகிருக்கும் அமைச்சர்கள்கூட உணர்வதற்கோ கண்டுபிடிப்பதற்கோ அரிதாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று அரச இலட்சணம் பற்றி அரசியல் நூல்கள் கூறுகின்றன. நீயோ பரிசுக்குப் பாடும் பாண்மகளைப் படைத்த இறைவனை வியந்து உருகுகிறாய்."

"தவறு என்னுடையதுதான். இளைய பாண்டியரை அரண்மனைக்கு அழைத்து வராமல் கடற்கரைப் புன்னைத் தோட்டத்துக்குப் போவதற்குத் துணை நின்றிருக்கக் கூடாது" என்று முடிநாகன் வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பயந்தபடி வெளியிடலானான். அதைக் கேட்டு அவன்மேற் சீறினார் பெரியவர்.

"நீ என்னிடம் கூறிய கூற்றுப்படி நீங்களிருவரும்தான் புன்னைத் தோட்டத்திற்கே போகவில்லையே? முதலில் பொய் கூறிவிட்டு அப்புறம் ஏன் தடுமாறுகிறாய்? சாதித்த பொய்க்கு ஏற்பப் பேசத்தெரிய வேண்டும். அல்லது பேசியதற்கு ஏற்பச் சாதிக்கத் தெரிய வேண்டும். உங்களுக்கோ இரண்டு வகையிலுமே தேர்ச்சியில்லை" என்று வஞ்சப் புகழ்ச்சியில் இறங்கினார் பெரியவர். முடிநாகன் அவருக்கு மறுமொழி கூறும் சக்தி இழந்தான்.

"கடமையும், ஆண்மையுமே அரச குடும்பத்தின் பெருநிதிகள். அவற்றை மறந்தோ, இழந்தோ உருகுவதும், நெகிழ்வதும் தலைமேலுள்ள பொறுப்புக்களைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/82&oldid=490005" இலிருந்து மீள்விக்கப்பட்டது