86
கபாடபுரம்
மாறுவேடத்தில் முரசமேடைக்குப் புறப்பட்டார்கள். "போய் வருக! வெற்றி உங்கள் பக்கமாவதற்கு இப்போதே நான் நல்வாழ்த்துக் கூறுகிறேன்" என்று சிரித்துக்கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார் முதிய பாண்டியர்.
அவருடைய வாழ்த்தினால் முடிநாகன் பெருமையடைந்து விடவில்லை என்றாலும், தங்களை முழுமையாக உறைத்துப் பார்ப்பதற்கு அவர் துணிந்துவிட்டார் என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறவேண்டுமென்பதற்காக அவன் கபாடபுரத்தின் காவல் தெய்வங்களையும், வழிபடு கடவுளர்களையும் மனமார வேண்டிக்கொண்டிருந்தான். செய்யவேண்டிய சோதனைகளையும், ஒற்றறிதல் வேலைகளையும் அவுணர்வீதியைச் சார்ந்த இடங்களிலும் சுரங்கப் பகுதியிலுமே நிகழ்த்த வேண்டியிருந்ததனால் அவுணர்கள் போன்றதொரு கோலத்தையே அவர்களிருவரும் மாறுவேடமாகப் புனைந்துகொண்டிருந்தனர். கோட்டைப் புறமதில்களைக் கடந்து அவுணர்வீதியை அடைந்தபோது வீதி பேய் அமைதியில் மூழ்கியிருந்தது. வானில் மேகம் கவிந்திருந்ததனால் இருட்டும் அதிகமாக இருந்தது. முரசமேடையைச் சுற்றி யாரும் தென்படவில்லை. சூனியமானதொரு பயங்கர நிலை நிலவியது அங்கே.
முடிநாகன் வலது புறமும், இளையபாண்டியன் இடது புறமுமாக முரசமேடையைச் சூழ்ந்து கீழே இறங்குவதற்கான சுரங்க வழி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்க முயன்றார்கள். மேடையும் பக்கச் சுவர்களும், மேலே மலையைக் கவிழ்த்து நிறுத்தி வைத்தாற் போன்ற மாபெரும் முரசமுமாக இருந்த அந்த இடத்தில் முந்திய இரவு மனிதர்கள் திடீர்திடீர் என்று அங்கு வந்ததுமே முரசடியில் மறைவதைக் கண்ணுக்கெதிரில் கண்டிருந்தும் இன்று அந்த ரகசிய வழிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்கள் அவர்கள்.
அரண்மனையிலிருந்து புறப்பட்டபோது பாட்டனார் சிரித்த சிரிப்பும், வாழ்த்திய வாழ்த்தும் நினைவு வந்தன. எதையும்