உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கபாடபுரம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

87


ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாமல் திரும்பினால் அதைப்போல் பெரிய தோல்வி வேறெதுவும் இருக்க முடியாது. நீண்டநேரம் முரசமேடையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தாலும் வேற்றவர் எவரேனும் சந்தேகக் கண்ணோடு காண நேரிட்டுவிடும். இந்த மனவேதனையில் இருள் வேறு அவர்களுக்கு எதிரியாகி இருந்தது. ஒரு விதத்தில் அந்த இருளே துணையாகவும் இருந்தது. இறுதியில் முடிநாகன்தான் அந்த அதிசயத்தைக் கண்டுபிடித்தான்.

முரசமேடையின் பக்கச் சுவர்களிலே அவர்கள் தேடிய வழி அகப்படவில்லை. கீழே தரையில் வெண்கலத்தை மிதிப்பதுபோலத் திமுதிமு வென்று ஒலி அதிரவே முடிநாகன் கையால் கீழே தொட்டுத் தடவிப் பார்த்தபோது மணலுக்கு அடியில் கனமான மரப்பலகை தளமாக இருந்தது. அந்தப் பலகையை ஒவ்வொரு நுனியாகத் தொட்டுப் பார்த்தபோது நடுவில் ஐந்தாறு விரற்கடை இடைவெளியோடு பக்கத்துக்கு ஒன்றாய் இரண்டிடங்களில் மேலே தூக்குவதற்கு வாய்ப்பாக இரும்பு வளையங்கள் இடப்பட்டிருந்தன. பக்கத்தில் மேடையருகே மணற் குவியலொன்றும் நிரந்தரமாக இருந்தது. ஒவ்வொரு முறை திறந்து மூடியபின்பும் அந்த இடம் தரைபோல் தெரிய வேண்டுமென்பதற்காக மேலே மணலை இட்டு நிரப்பிவிடுவார்கள் போலும் என்று அதுமானம் செய்யமுடிந்தது. மணலை இட்டு நிரப்பினாலும் தரைமேல் நடக்கும்போது இருக்கும் ஒசைக்கும் இந்த மரப்பலகைக்கு மேல் மணல் மூடிய இடத்தில் நடக்கும்போது இருக்கும் ஒசைக்கும் வேறுபாடு இருந்தது. இதில் நடக்கும்போது ஒசை அதிர்ந்தது.

"வழி தெரிந்துவிட்டது" - என்று முடிநாகனுடைய காதருகில் உற்சாகமாகக் குரல் கொடுத்தான்சாரகுமாரன்.

"இருளில் மெல்லப் பேசவேண்டும். முடியுமானால் பேசாமலே காரியங்களைத் தொடர்வதும் நல்லது. இந்த விதமான வேளைகளில் மெளனமும் குறிப்பறிதலுமே பெரிய துணைகள். இருளுக்குள் ஆயிரம் செவிகள் இருக்கலாம். பதினாயிரம்கண்கள் இருக்கலாம், எனவே கவனமும் விழிப்புமாகக் காரியத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/89&oldid=490012" இலிருந்து மீள்விக்கப்பட்டது