88
கபாடபுரம்
நிறைவேற்ற வேண்டும்" - என்று இளையபாண்டியனிடம் மிக மெல்லிய குரலில் காதருகே கூறி எச்சரித்து விட்டு இரும்பு வளையத்தைப் பற்றிப் பலகையைத் தூக்கத் தொடங்கினான். மற்றொரு பக்க வளையத்தைக் குறிப்பறிந்து சாரகுமாரன் மேலே தூக்கலானான். கீழே இருளில் படிகளைப் போல் மங்கலாகத் தெரிந்தன.
இருவரும் ஆவலோடு கீழிறங்கினர். பத்துப் படிகள் வரை வழி கீழே இறங்கியது. பதினோறாவது படியே இல்லை. கீழே பாறை இடறியது. பக்கவாட்டில் சுவர்போல் பெரிய கல் வழி மறித்தது. இருள்வேறு செறிந்திருந்தது. எனவே இருவரும் திகிலுடனும், பரபரப்புடனும் மேலே ஏறிவந்து அவசர அவசரமாகப் பலகையிட்டு அந்த வழியை மூடி மணலும் இட்டு நிரப்பினர். அது வழியாக இருக்க முடியாதென்று அவர்கள் இருவருக்கும் தோன்றியது. சுரங்கங்களிலும் இரகசிய வழிகளிலும் மற்றவர்கள் தெரிந்து கொள்ளாமலிருப்பதற்கென்று உண்மையான வழியை மறைப்பதற்காக வழிகள் போன்று தெரியும் ஆனால் வழிகளாகாத பல போலி வழிகளை உண்டாக்கியிருப்பார்கள் என்பதை முடிநாகன் அறிவான்.
முரசமேடையின் நான்கு பக்கச் சுவர்களில் எந்தச் சுவர் அருகிலும் வழி இருக்கலாம். எந்தச் சுவர் அருகில் எந்தச் சுவருக்குக் கீழேயிருந்து வழி தொடங்குகிறதென்று காண மருளும்படியும் மயங்கும்படியும் ஒவ்வொரு சுவரருகிலிருந்துமே உண்மையான வழி தொடங்குவதுபோல் பாவனை ஒன்று காட்டப்பட்டிருந்தது. ஒரு நாழிகைப் போதுக்கு மேல் சோதித்துப் பார்த்த பின்பே உண்மைச் சுரங்க வழி தொடங்குமிடம் தெரிந்தது. தெற்குப் பக்கத்துச் சுவரையொட்டி முரசமேடையின் கீழே உண்மையான படி வழிகள் தொடங்கின. பலகையைத் தூக்கியதும், இரண்டு மூன்று வெளவால்கள் சிறகடித்து மேலே வந்தன. கீழேயும் படிகள் பெரிதாக நீண்டு கிடந்தன.