பக்கம்:கபாடபுரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

89


"மற்ற எல்லாப் பக்கமும் மயக்கு வழிகளாயிருந்து விட்டதனால் இதுவே உண்மை வழியாயிருக்கவேண்டும் இளையபாண்டியரே! அடிக்கடி திறந்து மூடுவதால்தான் இதில் வெளவாலாவது உயிர் வாழ்கிறது. மற்ற வழிகளில் இவை கூடப் பறக்கவில்லையே?" என்று கூறிக்கொண்டே படிகளில் இறங்கினான் முடிநாகன். சாரகுமாரனும் அவனைப் பின் தொடர்ந்தான். சிறிது தொலைவு சென்றதும் உண்மை வழி அதுவே என்பது முடிவாயிற்று.

"மேலே போய் - உட்புறம் நின்றபடியே பலகையை மூடிவிடவேண்டும். இல்லாவிட்டால் திறந்த வழியைப் பார்த்தே சந்தேகப்பட்டு யாராவது நம்மைப் பின் தொடரக் கூடும்” என்று கூறிய முடிநாகன் மேலே வந்து உட்புறத்தில் நின்றபடியே பலகையை இழுத்துப் பொருத்தினான். பலகை மேற்புறம் நன்றாகப் பொருந்திக் கொண்டதற்கு அடையாளமாக உள்ளே இருள் மேலும் கனத்துச் செறிந்தது. தடுக்கி விழாமல் கீழே இறங்கப் படிகளில் கவனமாக அடி பெயர்த்து வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. உள்ளே வெளவால் நாற்றமும், காற்றுப் புகாத இறுக்கமுமாக இருந்தன.

"இந்த முரசமேடையிலிருந்து நகரில் எந்தெந்தப் பகுதிகளுக்குப் போவதற்கெல்லாம் சுரங்க வழிகள் குடைந்திருக்கிறார்களோ? இந்த அரக்கர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்?" என்று சாரகுமாரன் கூறியபோது,

"செய்தால் என்ன? அவர்கள் இரகசியம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் அவர்களுக்கு முன்பாகவே உங்கள் பாட்டனார் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பார். எதிராளி 'நாம் அவனைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறோம்' - என்பதை உணரவோ, புரிந்து கொள்ளவோ விடாமல் அவனைப்பற்றி நிறைய அறிந்து கொண்டு அமைதியாயிருப்பதுதான் மிகப் பெரிய அரச தந்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/91&oldid=490014" இலிருந்து மீள்விக்கப்பட்டது